உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிலீக்சிற்கு இரகசியங்களைக் கசிய விட்ட பிராட்லி மானிங்கிற்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 22, 2013

விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்களைக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த அமெரிக்காவின் முன்னாள் இராணுவ வீரர் பிராட்லி மானிங்கிற்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


பிராட்லி மானிங்

25 வயதாகும் பிராட்லி மானிங் மீது வேவு பார்த்தமை உட்பட 20 குற்றச்சாட்டுகள் கடந்த சூலை மாதத்தில் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் பிராட்லி எழுதிய அறிக்கை ஒன்றை அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் படித்தார். "நமது நாட்டின் நன்மைக்காகவே, அதன் மீது அன்பு கொண்டே" இதனைத் தான் செய்ததாகத் தெரிவித்தார்.


பிராட்லியின் ஆதரவாளர்கள் பிராட்லியை மன்னிக்கும் படி அரசுத்தலைவர் பராக் ஒபாமாவைக் கேட்டுக் கொண்டுள்ளனர். பிராட்லி ஏறத்தாழ 7 முதல் 10 ஆண்டுகளில் நன்னடத்தை விடுதலை பெறுவார் என அவரது வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்தார்.


அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் 60 ஆண்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வாதாடியிருந்தனர். ஆனால், 35 ஆண்டுத் தண்டனை ஒரு முக்கிய வெற்றி என விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.


ஆத்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சேயின் விக்கிலீக்ஸ் இணையதளம் கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களையும், அமெரிக்கத் தூதர்கள் அனுப்பிய இரகசியத் தகவல்களையும் வெளியிட்டிருந்தது. இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஈராக்கில் பணியாற்றிக் கொண்டிருந்த அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த பிராட்லி மானிங்கை அமெரிக்கப் புலனாய்வுத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அமெரிக்க இராணுவ ரகசியங்களையும், அமெரிக்க அரசின் பல்வேறு ரகசிய ஆவணங்களையும் விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு மானிங் கொடுத்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தத் தகவல்களால் அரேபிய வளைகுடா நாடுகளில் உள்ள அல்கைதா தீவிரவாதிகள் பயன் அடைந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]