உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிலீக்ஸ் ரகசியங்களை வெளியிட்டது குற்றமில்லை, டேனியல் எல்ஸ்பெர்க்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 4, 2013

விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு ஆவணங்களைக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரட்லி மானிங்கை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை பேரணி ஒன்று நடந்தது.


டேனியல் எல்ஸ்பெர்க்
பிரட்லி மானிங்

பேரணியில் அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி டேனியல் எல்ஸ்பர்க் கலந்து கொண்டு உரையாற்றும் போது, "உண்மையை சொல்பவர்கள் மீது அமெரிக்கா போர் தொடுக்கிறது. அரசின் குற்றங்கள், பொய்கள் வெளிவருவதை அமெரிக்கா விரும்புவதில்லை. சனநாயக நாட்டில் உண்மையை அறிய மக்களுக்கு உரிமை இருக்கிறது. இதை அரசு தடுக்கக் கூடாது. தடுத்தால் அது குற்றமாகும். எனவே உண்மையை வெளியிட்ட பிரட்லி விடுதலை செய்யப்பட வேண்டும். அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களை பிரட்லி விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டதால் இப்போது ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். எனவே பிரட்லி தேசபக்தி மிக்கவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை," என்றார்.


டேனியல் எல்ஸ்பர்க் கடந்த 1971 ம் ஆண்டு இராணுவத்தில் அதிகாரியாக இருந்தபோது வியட்நாமில் அமெரிக்க ராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்பான ஆவணங்களை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அனுப்பி வெளியிடச் செய்தார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட வியட்நாமில் அமெரிக்க ராணுவத்தினரின் அத்துமீறல்கள் செய்தி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது. வியட்நாமில் அப்போது இருந்த ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆத்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சேயின் விக்கிலீக்ஸ் இணையதளம் கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களையும், அமெரிக்கத் தூதர்கள் அனுப்பிய இரகசியத் தகவல்களையும் வெளியிட்டு அமெரிக்காவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியது. இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த பிரட்லி மன்னிங் (25) என்பவரை அமெரிக்கக் புலனாய்வுத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அமெரிக்க இராணுவ ரகசியங்களையும், அமெரிக்க அரசின் பல்வேறு ரகசிய ஆவணங்களையும் விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு பிரட்லி மன்னிங் கொடுத்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த தகவல்களால் அரேபிய வளைகுடா நாடுகளில் உள்ள அல்கைதா தீவிரவாதிகள் பயன் அடைந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.


இந்த வழக்கில் தேடப்பட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து நாட்டின் தலைநகரில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார். இப்போதும் இவர் எக்குவடோர் தூதரகத்தில் தான் உள்ளார். இந்த நிலையில் சிறையில் உள்ள பிரட்லி மீது அமெரிக்க ராணுவ நீதிமன்றத்தில் ரகசிய விசாரணை கடந்த திங்களன்று தொடங்கியது. விசாரணையின் போது பிரட்லி, நாங்கள் வெளியிட்ட 2 ஆவணங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இப்போதும் நம்புகிறேன் என்று தெரிவித்தார். வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரட்லிக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பிரட்லிக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்க வலியுறுத்தி உள்ளனர்.


மூலம்

[தொகு]