விண்கழிவுப் பொருளின் மோதலில் இருந்து பன்னாட்டு விண்வெளி நிலையம் தப்பியது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, மார்ச் 24, 2012

பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அண்டி விண்வெளிக் கழிவுப் பொருள் ஒன்று சென்றதை அடுத்து விண்வெளி நிலைய வீரர்கள் அவசர அவசரமாகத் தமது பாதுகாப்பு அறையினுள் சென்றனர்.


உருசிய விண்கலம் ஒன்றில் இருந்து வெளியகற்றப்பட்ட கழிவுப் பொருள் ஒன்று விண்வெளி நிலையத்தை நோக்கி வருவது நேற்று வெள்ளிக்கிழமை அன்று கண்டுபிடிக்கப்பட்ட போது விண்வெளி நிலையத்தை நகர்த்துவதற்கு நேரம் கிடைக்கவில்லை. விண்வெளி நிலையத்தில் இருந்து 24 கிமீ தூரத்தில் அது கடந்து சென்றது. விண்கழிவுப் பொருள் ஆபத்தான தூரத்தில் இல்லாவிட்டாலும், பாதுகாப்புக் கருதியே விண்வெளி வீரர்கள் சோயூஸ் பாதுகாப்புக் கவசத்தினுள் சென்றனர் என நாசா அறிவித்துள்ளது.


உருசியாவின் கொஸ்மஸ்-2251 என்ற செயற்கைக்கோள் 1993 சூன் 16 இல் ஏவப்பட்டது. 2009 பெப்ரவரி 10 ஆம் நாள் இந்தச் செயற்கைக்கோள் அமெரிக்காவின் இரிடியம்-33 என்ற வேறொரு செயற்கைக் கோளுடன் 790 கிமீ உயரத்தில் மோதியது. இரண்டும் முற்றாக அழிக்கப்பட்டன. இவ்வாறு விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்கள் மோதுவது அதுவே முதற்தடவை எனக் கூறப்பட்டது. கொஸ்மஸ்-2251 600 துண்டுகள் வரை சிதறுண்டது. இதில் ஒன்றே நேற்று விண்வெளி நிலையத்தைக் கடந்து சென்றது.


கடந்த 12 ஆண்டுகளில் விண்வெளி நிலையம் விண்கழிவுப் பொருள் ஒன்றைத் தனது பாதையில் காண்பது இது மூன்றாவது முறையாகும். கடந்த ஆண்டு சூன் மாதத்தில் கழிவுப் பொருள் ஒன்று 335 மீட்டர்கள் தூரத்தில் கடந்து சென்றது.


அனைத்துலக விண்வெளி நிலையத்தில் தற்போது மூன்று உருசியர்கள், இரண்டு அமெரிக்கர்கள், ஒரு சப்பானியர் என 6 விண்வெளி வீரர்கள் தங்கியுள்ளனர்.


கடந்த பல தசாப்தங்களாக இடம்பெற்று வரும் விண்வெளிப் பயணங்களால் ஒரு சமீ பருமன் முதல் செயலிழந்த செயற்கைக் கோள்கள் வரை மில்லியன் கணக்கான கழிவுப் பொருட்கள் விண்வெளியில் சுற்றி வருகின்றன. இவை அனைத்தும் ஒரு செக்கனுக்கு பல கிமீ வேகத்தில் செல்லுகின்றன.தற்போது 22,000 வரையிலான கழிவுப் பொருட்களைத் தாம் கண்காணித்து வருவதாக நாசா தெரிவிக்கின்றது.


மூலம்[தொகு]