உள்ளடக்கத்துக்குச் செல்

விண்மீனின் சுழலும் திசைக்கு எதிர்திசையில் சுற்றும் முதல் சூரியக் குடும்பம் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 20, 2013

விண்மீனின் சுழல் திசைக்கு எதிர் திசையில் அதன் கோள்கள் சுழலும் ஒரு சூரியக் குடும்பத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


பொதுவாக, ஒரு விண்மீனை சுற்றிவரும் அனைத்து கோள்களும், பெரும்பாலும் அவ்விண்மீன் சுழலும் திசையிலேயே அதன் கோள்களின் நீள்வட்டப்பாதையில் செல்லும். ஆனால், தற்போது அவ்வாறல்லாமல் எதிர்த் திசையில் கோள்கள் சுழலும் ஒரு சூரியக் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இவ்வார சயன்சு ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். கெப்லர் விண்கலம் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கெப்லர்-56 என்ற இந்த விண்மீன் நமது சூரியனை விட சற்று அதிக எடையுள்ளது. இதனை இரண்டு கோள்கள் சுற்றி வருவதாக 2012 ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது.


கெப்லர் விண்கலம் ஒரு விண்மீனில் அதன் இரண்டு கோள்களும் 45 பாகையில் அதனை சுற்றிவருவதை கண்டறிந்துள்ளது. அப்பொழுது அதனை ஆய்வு செய்த அறிவியலாளர்கள் அதன் இரண்டு கோள்களும் மிகவும் சாய்ந்து வட்டமிடுவதுடன் அவ்விண்மீன் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றுவதை கவனித்துள்ளனர். இதனால் உலகில் முதன்முறையாக இவ்வாறான மாறுபட்ட சூரியக் குடும்பத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா நிறுவனம் விண்ணுக்கு ஏவிய கெப்லர் விண்கலம் தற்போது கோள்கள் கண்டறியும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் கூட, அது கடந்த 4 ஆண்டுகளாக சேகரித்த தகவல்களை அறிவியலாளர்கள் அதனை மேலும் பகுப்பாய்வு செய்த போது இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.


மூலம்[தொகு]