விண்வீழ்கற்களில் நுண்ணுயிர்கள் இருப்பதாக நாசா அறிவியலாளர் தெரிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 7, 2011

விண்வீழ்கற்களில் புதையுண்ட நுண்ணுயிரிகளைத் தாம் கண்டறிந்துள்ளதாக ஐக்கிய அமெரிக்காவின் நாசா அறிவியலாளர் ஒருவர் தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த நுண்ணுயிர்கள் பூமியில் இருப்பவற்றுக்கு ஒத்ததாக இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.


மிக அரிதான விண்வீழ்கற்கள்

இவ்வாய்வு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், பூமியில் மட்டுமல்லாமல் பேரண்டத்தில் உயிரினங்கள் பரவலாக வாழ்வதும், சூரிய மண்டலத்தில் உலாவும் வால்வெள்ளி, நிலாக்கள் மற்றும் விண்பொருட்களில் இருந்து பூமிக்கு உயிரினம் வந்திருக்கலாம் எனவும் கருத இடமுண்டு.


நாசா வானியலாளர் ரிச்சார்ட் ஊவர் என்பவரின் இவ்வாய்வு பற்றிய அறிக்கை சென்ற வெள்ளிக்கிழமை அண்டவியல் ஆய்வேட்டில் (Journal of Cosmology) வெளியிடப்பட்டுள்ளது. இந்த நுண்ணுயிர்கள் உண்மையில் வெளியுலக உயிரா என்பது முழுமையாக நிரூபிக்க முடியாததெனிலும் இது ஒரு முக்கிய ஆய்வாகக் கருதப்படுகிறது.


மிகவும் அரிதான சிஐ1 சார்பனேசசு கொண்ட்ரைட்ஸ் (CI1 carbonaceous chondrites) என அழைக்கப்படும் விண்வீழ்கற்கள் (meteorites) ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவ்வகையான ஒன்பது விண்வீழ்கற்கள் பூமியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


இதர அறிவியலாளர்கள் இது பற்றிய மேலதிக ஆய்வுகளும் ஆழ விசாரணைகளும் தேவை எனக் கூறி உள்ளனர். "இவ்வாறான அறிக்கைகள் முன்னரும் வெளிவந்துள்ளது," என நாசாவின் ஏமெஸ் ஆய்வு மையத்தின் வானுயிரியலாளர் டேவிட் மொராயசு தெரிவித்தார். "இது ஒரு அசாதாரண ஆய்வு முடிவு. இவ்வாறான முடிவுகளுக்கு உறுதிப்படுத்தக்கூடிய சான்றுகளை எதிர்பார்க்கிறேன்," என்றார் அவர்.


மூலம்[தொகு]