உள்ளடக்கத்துக்குச் செல்

விபத்துக்குள்ளான ஏர் பிரான்சின் சிதைவுகள் அத்திலாந்திக் கடலில் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 4, 2011

2009 ஆம் ஆண்டில் அத்திலாந்திக் கடலில் 228 பயணிகளுடன் காணாமல் போன ஏர் பிரான்ஸ் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஏர்பிரான்ஸ் 447 விமானத்தின் பாதை

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படாதிருந்தது. கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கும் வரை விபத்துக்கான காரணத்தை அறிவது முடியாது என ஏர்பஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. விமானத்தின் பதிவு நாடாக்களைத் தேடும் பணி நான்காவது தடவையாக சென்ற மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. விமானத்தின் சிதைவுகளைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் தெரிவித்திருந்தாலும், அவற்றின் விபரங்களை வெளியிடவில்லை.


பிரேசில் முதல் மேற்கு ஆப்பிரிக்கா வரையான பெருங்கடலின் 4,000 மீ ஆழப் நிலப்பகுதிகளில் சுழியோடிகள், மற்றும் தானியங்கிகள் மூலம் தேடுதல் மேற்கொள்ளப்பட்டன.


2009 சூன் 1 ஆம் நாள் ரியோ டி ஜெனெய்ரோவில் இருந்து பாரிசு நோக்கிச் சென்ற ஏஎஃப் 447 விமானம் புயலில் சிக்கி கடலில் வீழ்ந்தது. இவ்விபத்துக் குறித்து விசாரணைகளை நடத்திய பிரெஞ்சு நீதிபதி, நோக்கமில்லாப் படுகொலைக் குற்றச்சாட்டை ஏர் பிரான்ஸ் நிறுவனம் மீது சுமத்தியுள்ளார்.


ஆரம்பத் தேடுதல் மூலம் 50 உடல்களும் விமானத்தின் பல பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. கடைசித் தேடுதல் மே 2010 இல் முடிவடைந்தது. 30 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இவ்விமான விபத்தில் உயிரிழந்தனர்.


மூலம்[தொகு]