உள்ளடக்கத்துக்குச் செல்

வியாழனின் சந்திரன் 'கற்குழம்புப் பெருங்கடலைக்' கொண்டுள்ளதாக நாசா கூறுகிறது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 14, 2011

வியாழக் கிரகத்தின் ஐஓ (Io) என்ற சந்திரன் எமது சூரியக் குடும்பத்தில் பெருமளவு எரிமலைகளைக் கொண்டுள்ளது. இது எப்படி உருவானது என்பது குறித்து வானியலாளர்கள் இப்போது மேலதிக தகவல்களைத் தந்துள்ளார்கள்.


கலிலியோ அனுப்பிய ஐஓ சந்திரனின் மேற்பரப்புப் படம்

வியாழனின் இந்த சந்திரன் பூமியை விட 100 இற்கும் அதிக மடங்கு லாவாக்களை அதன் மேற்பரப்புக்கு வெளிவிடுகிறது. நாசாவின் கலிலியோ விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் ஐஓ என்ற இச்சந்திரனின் ஓட்டில் உள்ள பெரும் கற்குழம்பு (மக்மா) கடலில் இருந்தே இந்த லாவாக்கள் வெளியேறுகின்றன எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.


இந்தக் கொப்புளிக்கும் வெப்பக் கிடங்கு கிட்டத்தட்ட 50 கிமீ தடிப்புள்ளதாக அறிவியலாளர்கள் சயன்ஸ் இதழில் தெரிவித்துள்ளனர். ஆனால் இக்கிடங்கு இன்னும் பெரிதாக இருக்கலாம் என நாம் நம்புகிறோம் என இவ்வாய்வின் தலைவரான லாஸ் ஏஞ்சலஸ் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் கிரிஷான் குரானா தெரிவிக்கிறார்.


"எரிமலைகள் ஏன் சந்திரனின் அனைத்து மேற்பரப்புகளிலும் காணப்படுவதற்குஅதன் ஓட்டுக்குக் கீழே பெரும் மக்மாக் கடல் இருப்பதே காரணம்," என குரானா தெரிவித்தார். பூமியில் எரிமலைகள் கண்டத் தட்டுகளுக்குக் கிட்டவாகவே உள்ளன.


நாசாவின் கலிலியோ விண்கலம் 1989 ஆம் ஆண்டில் விண்ணுக்கு ஏவப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் வியழனை அது சென்றடைந்த பாதையில் பல சிறுகோள்களை அது சந்தித்திருந்தது. இதுவே வியாழனின் சுற்றுப்பாதையை அடைந்த முதலாவது விண்கலம் ஆகும். ஐஓ சந்திரனுக்குக் கிட்டவாக ஏழு முறை சென்று அதனைப் படம் பிடித்துள்ளது. 14 ஆண்டுகள் விண்வெளியில் உலாவிய கலிலியோ திட்டம் 2003, செப்டம்பர் 21 இல் கைவிடப்பட்டது. அன்று இவ்விண்கலம் வினாடிக்கு 50 கிமீ வேகத்தில் வியாழனின் வளிமண்டலத்தினுள் அனுப்பட்டு வியாழனுடன் மோதவிடப்பட்டது. பூமியில் இருந்து பாக்டீரியாக்கள் எதனாலும் அங்குள்ள சிறுகோள்கள் எதுவும் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டே கலிலியோ கைவிடப்பட்டது.


மூலம்

[தொகு]