உள்ளடக்கத்துக்குச் செல்

வெனிசு நகரம் தொடர்ந்து நீரில் மூழ்கி வருகிறது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 28, 2012

இத்தாலியின் வெனிசு நகரம் நீரில் மூழ்கி வருவதாகவும், இது மேலும் பல ஆண்டுகள் நீரினுள் செல்லும் எனவும் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெனிசு நகரத்தை நீரினுள் மூழ்காமல் பாதுகாக்க ஏற்கனவே பல தடுப்புகளை உள்ளூர் அரசு ஏற்படுத்தியுள்ளது.


வெனிசு நகரம்

"நகரம் மேலும் நீரினுள் மூழ்காமல் தடுக்கப்பட்டுள்ளது எனக் கருதப்பட்டு வந்தது, ஆனால் அது தொடர்ந்து காலவரையறையின்றி சிறிது சிறிதாக மூழ்கி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,” என கலிபோர்னியாவைச் சேர்ந்த புவிப்பரப்பிய அளவியலார் யெகுடா பொக் தெரிவித்தார்.


வெனிசின் மணல் நிலத்துக்கடியில் இறுகி வருவதால் அது தன்னுடன் நகரையும் கீழே இழுத்து வருகிறது. அப்பெனின் மலைகளுக்குக் கீழே மிக மெதுவாகச் செல்லும் பூமியின் மேலோட்டில் உள்ள தட்டு மீது வெனிசு நகரம் செல்வதால், வெனிசு நகரத்தில் ஒரு சாய்வு ஏற்பட முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.


2000 ஆம் ஆண்டு முதல் 2010 வரை ஆண்டொன்றுக்கு சராசரியாக 1 முதல் 2 மில்லிமீட்டர்கள் வரை நகரம் நீரில் மூழ்கி வருவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த சராசரியை விடப் பெருமளவு குறைவாகும். அத்துடன், நியூ ஓர்லீன்சு நகரம் நீரில் மூழ்கும் வீதத்தை விடவும் இது குறைவானதாகும். இதனால் இதனைப் பல ஆய்வாளர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.


ஆனாலும், கடல் மட்ட வேறுபாட்டையும் கருத்தில் கொள்ளும் போது 1 மில்லிமீட்டர் என்பது ஒரு குறிப்பிடத்தக்க அளவாகும் என யெகுடா பொக் தெரிவித்தார். 20ம் நூற்றாண்டில் வெனிசு நகரில் கடல் மட்டம் 13 செ.மீ. களால் உயர்ந்ததில் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


“பேரலைகள் ஏற்படும் போது தடுப்புகள் போடப்பட்டன. இவற்றை எதிர்காலத்தில் அடிக்கடி பயன்படுத்த வேண்டி வரலாம்,” என அவர் எச்சரித்துள்ளார்.


மூலம்[தொகு]