உள்ளடக்கத்துக்குச் செல்

வொயேஜர் விண்கலம் சூரியக் குடும்பத்தின் எல்லையில் 'காந்த நெடுஞ்சாலை' ஒன்றைக் கண்டுபிடித்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 5, 2012

30 ஆண்டுகளுக்கு முன்னர் வியாழன், சனி கோள்கள் மற்றும் அவற்றின் துணைக்கோள்கள் ஆகியவற்றின் படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பிய வொயேஜர் 1 ஆளில்லா விண்கலம், நமது சூரியக் குடும்பத்தின் விளிம்பில் எதிர்பாராத புதிய வலயம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறது.


வொயேஜர்-1 விண்கலம்

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள "காந்த நெடுஞ்சாலை" (magnetic highway) சூரியன்சூழ் வான்மண்டலத்தையும், அதற்கு அப்பாலுள்ள வான்வெளியையும் இணைக்கிறது என இயற்பியலாளர் ஸ்தமோத்தியோசு கிரிமிகிசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் அமெரிக்கப் புவியியற்பியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இவ்வாண்டு இறுதியில் வொயேஜர் 1 விண்கலம் சூரியக் குடும்பத்தின் எல்லையைத் தாண்டி வெளியேறும் என சில மாதங்களுக்கு முன்னர் நாசா ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். கடந்த சூலை மாதத்தில் இருந்து சூரியன்சூழ் வான்மண்டலத்தை (heliopause) விண்கலம் அண்மிக்கையில், சூரியக் காற்றின் துணிக்கைகள் பல ஆயிரம் மடங்கு வரை குறைந்ததையும், மாறாக விண்மீன்களிடை வெளியில் இருந்து வரும் அண்டக் கதிர்களின் செறிவு அதிகரித்ததையும் அவர்கள் அவதானித்தனர்.


"இதன் படி பார்த்தால் விண்கலம் சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்கிறது என்பதாகக் கூறிவிடலாம்" என ஸ்தமோத்தியோசு கிரிமிகிசு கூறினார். அதே வேளையில், "நாம் எதிர்பார்த்தவாறு காந்தப் புலத்தின் செறிவு அதிகரித்த போதும், அதன் திசையில் மாற்றம் ஏற்படுவதை எமது உபகரணங்கள் உணரவில்லை." இக்காரணத்தினால், "விண்மீன்களிடை வெளியை விண்கலம் அடைந்து விட்டதை நாம் உறுதியாகக் கூற முடியாதுள்ளது," என லியோனார்து புர்லாகா என்பவர் கூறினார்.


சூரியனின் தெற்கு அரைக்கோளத்தில் இருந்தான காந்தப் புலத்தினால் உருவான நெடுஞ்சாலைப் பகுதி சூரியன்சூழ் வான்மண்டலத்தில் உள்ள துணிக்கைகளை விண்மீன்களிடை வெளியை நோக்கி தப்பித்துச் செல்ல அனுமதிக்கிறது, அதே வேளையில் வெளிப்புறத்தில் இருந்து துணிக்கைகளை உள்ளே வரவும் அது அனுமதிக்கிறது.


1977 ஆம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட வொயேஜர் 1 விண்கலம் தற்போது சூரியனில் இருந்து 11 பில்லியன் மைல்களுக்கு அப்பால் சேன்று கொண்டிருக்கிறது. மனிதனால் செய்யப்பட்ட ஒரு பொருள் இவ்வளவு தூரம் செல்வது இதுவே முதற் தடவையாகும் என நாசா கூறுகிறது. இதன் சகோதர விண்கலம் வொயேஜர் 2 விண்கலம் சூரியனில் இருந்து 9 பில்லியன் மைல்களுக்கு அப்பால் செல்கின்றது. புளுட்டோனியம்-238 இனால் இயங்கும் இவற்றின் உபகரணங்களின் வாழ்வுக்காலம் 2025 ஆம் ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


காந்த நெடுஞ்சாலை 5 முதல் 10 வானிலை அலகுகள் தடிப்பானவையாக (அதாவது, சூரியனில் இருந்து பூமிக்கிடையையேயான தூரத்தின் 5 முதல் 10 மடங்கு தூரம்) இருக்கலாம் என நாசா அறிவியலாளர்கள் நம்புகின்றனர். இந்த அனுமானம் உண்மையாக இருக்குமானால், வொயேஜர் 1 விண்கலம் இப்பிராந்தியத்தைத் தாண்ட குறைந்தது மூன்று ஆண்டுகள் செல்லும்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]