உள்ளடக்கத்துக்குச் செல்

வௌவாலின் ஒரு வகை நரம்பணுவே முப்பரிமாண காட்சிகளைக் காணச் செய்கிறது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 20, 2013

இட உயிர்மிகள் (Place cells) என அழைக்கப்படுகிற நரம்பணுவே வௌவாலின் முப்பரிமாணக் காட்சிகளைக் காணச்செய்கிறது என அண்மைய ஆய்வு ஒன்று பரிந்துரைக்கிறது.


எகிப்தியப் பழந்தின்னி வௌவால்கள்

ஆங்கில அறிவியல் இதழான சயன்சு ஏப்ரல் 18 இதழில் ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் ரெளசெட்டசு எகிப்தியக்கசு (Rousettus aegyptiacus) எனப்படும் எகிப்தியப் பழந்தின்னி வௌவால் தன் இட உயிர்மிகளால் தனது முப்பரிமாண காட்சிகளை அனுபவித்து வருகிறது என கூறப்பட்டுள்ளது.


வௌவாலின் மூளையில் மின்முனைகளைப் பொருத்தியும், அதன் தலைகளில் சிறிய கம்பியற்ற பதிவுக் கருவிகளை வைத்தும் வௌவால் மேலும் கீழும் பறக்கும் பொழுது நரம்பணுக்களின் செயல்பாட்டை பதிவு செய்தனர். வௌவால் ஒரு பொருளைப் பெரிதாக்கிப் பார்க்கும் பொழுது இட உயிர்மிகள் சோர்வு நீங்கி உற்சாகமடைகிறது என இசுரேலில் உள்ள வெய்சுமன் அறிவியல் கழகத்தை (Weizmann Institute of Science) சேர்ந்த மைக்கேல் யார்ட்சேவ், நாக்கும் உலனோவுசுக்கி ஆகியோர் அறிவித்தனர்.


ஒரு வரைபடத்தில் நாம் குறித்த இடங்களைப் புள்ளிகளால் குறித்து வைப்பதைப் போன்று, அந்தப் பதிவுத் தாளானது அமைந்திருந்தது. அந்த வௌவால் அறையில் எங்கெல்லாம் தனது முப்பரிமாண காட்சியைக் காண முற்படுகிறதோ அங்கெல்லாம் இந்த வௌவால் தனது இட உயிர்மிகளை செயலாக்கிக் கொள்கிறது. கம்பியற்ற நரம்பு - தொலையளவியல் கட்டகத்தைப் (neural-telemetry system) பயன்படுத்தி பதிவு செய்த போது, 90 விழுக்காடு நரம்பணுக்களை செயலாக்கி, மூன்று பரிமாண அச்சுக்களிலுமே கிட்டத்தட்ட ஒரே அளவு பகுதிறனுடன் அது காட்சிகளை உள்வாங்கிக்கொள்கிறது என அறிக்கை கூறுகிறது.


இந்த ஆய்வின் முடிவை மூளைச் சுற்றுகள் எப்படி விலங்குகள் தான் காணும் முப்பரிமாண இடத்தை அறிந்து கொள்கிறது என்ற நீண்டகால புதிரின் விடையாக கருதலாம் எனவும் அவர்கள் மேலும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


மூலம்

[தொகு]