ஸ்டார்டஸ்ட் விண்கலம் வால்வெள்ளியை அண்மித்தது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 15, 2011

நாசாவின் ஸ்டார்டஸ்ட் விண்கலம் டெம்பெல் 1 வால்வெள்ளியைக் கடந்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலையில் இடம்பெற்றுள்ள இந்த நிகழ்வில் இருந்து பனிக்கட்டியையும், தூசுகளையும் கொண்டுள்ள இவ்வான்பொருள் எவ்வாறு காலத்துக்கேற்ப மாற்றம் காண்கிறது போன்ற நுணுக்கமான தகவல்களை அறியக்கூடியதாக இருக்கும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஸ்டார்டஸ்ட் விண்கலம்

டெம்பெல் 1 வால்வெள்ளியை 2005 ஆம் ஆண்டில் வேறொரு விண்கலம் சந்தித்திருந்தது. 7.5 கிமீ அகலமுள்ள இந்த வால்வெள்ளி கடந்த ஆறு ஆண்டுகளில் அடைந்த மாற்றங்களை ஸ்டார்டஸ் எடுத்த புதிய படங்கள் மூலம் அறியலாம் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர். 300 கிலோகிராம் எடையுள்ள ஸ்டார்டஸ்ட் விண்கலம் 1999, பெப்ரவரி 7 ஆம் நாள் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.


வால்வெள்ளியின் நடுப்பகுதியில் இருந்து 200 கிமீ தூரத்தில் ஸ்டார்டஸ்ட் விண்கலம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகத் துல்லியமான 70 படங்களை எடுக்கும் வண்ணம் ஸ்டார்டஸ்ட் கட்டளையிடப்படும். அதனை விட இவ்வான்பொருளின் சுற்றுப்புறச் சூழலையும் விண்கலத்துடன் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்கள் ஆராயும்.


இச்சந்திப்பு பூமியில் இருந்து 336 மில்லியன் கிமீ தூரத்தில் நிகழ்ந்துள்ளது. படங்கள் செவ்வாய்க்கிழமை மாலையில் பூமிக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


டெம்பெல் 1 வால்வெள்ளி 1867 ஆம் ஆண்டில் வில்லெம் டெம்பெல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது சூரியனை 5.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.


மூலம்[தொகு]