உள்ளடக்கத்துக்குச் செல்

18 பேருடன் சென்ற இந்தோனேசிய விமானம் சுமாத்திராவில் வீழ்ந்தது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டெம்பர் 29, 2011

18 பேருடன் சென்ற விமானம் ஒன்று மேற்கு இந்தோனேசியாவின் மலைப் பகுதிகளில் வீழ்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.


எசுபானியத் தயாரிப்பான காசா சி-212 என்ற இந்த விமானம் வடக்கு சுமாத்திராவுக்கும் ஆச்சே மாகாணத்திற்கும் இடையில் பயணிக்கும் போது அவசர சைகையை அனுப்பியதாக போக்குவரத்துத் துறை அமைச்சு அதிகாரி தெரிவித்தார். உடனேயே தொடர்புகள் துண்டிக்கப்பட்டு வடக்கு சுமாத்திராவின் பகோரொக் என்ற ஊரில் வீழ்ந்தது. இன்று காலை உள்ளூர் நேரம் 07:28 மணிக்கும் 08:05 மணிக்கும் இடையில் இவ்விபத்து நடந்தது.


பெரும் மழை மற்றும் காற்றினால் நிவாரண உதவிகள் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமானம் வீழ்ந்த பகுதி வான்வெளி மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் பெரிதும் சேதமடைந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


விமானத்தில் நான்கு சிறுவர்கள், நான்கு விமானிகள் உட்பட 18 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் நிலையைப் பற்றிய தகவல்கள் இதுவரையில் கிடைக்கவில்லை.


கடந்த மே மாதத்தில், மேற்கு பப்புவா மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]