1900களில் தொலைந்த விமானத்தின் பாகங்கள் அண்டார்க்டிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 3, 2010


1912 ஆம் ஆண்டில், அண்டார்க்டிக்காவுக்கு முதன் முதலாகக் கொண்டு செல்லப்பட்ட விமானத்தின் எஞ்சிய பாகங்களைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வுக் குழுவொன்று சனிக்கிழமை அறிவித்தது.


மோசன் ஹட்ஸ் அறக்கட்டளை என்ற நிறுவனம் இந்த விமானத்தின் எச்சங்களைக் கண்டுபிடிப்பதற்காக மூன்று ஆண்டுகள் செலவழித்து, இந்தப் புத்தாண்டு நாளில் அதன் எண்ணம் கைகூடியது.


"அதன் சில பாகங்களை இப்போது கண்டுபிடித்திருப்பது ஒரு மிகப் பெரும் செய்தியாகும்," என அக்குழுவின் உறுப்பினர் டொனி ஸ்டுவர்ட் அறிவித்திருக்கிறார்.


1910களின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் துருவ ஆய்வாளரும், நிலவியலாளருமான டக்லஸ் மோசன் (Douglas Mawson) அண்டார்க்ட்டிக்காவுக்கு இரண்டு முறை தனது குழுவினருடன் பயணம் மேற்கொண்டிருந்தார். முதற்தடவை அவர் தன்னுடன் ஒரு விமானத்தையும் கொண்டு வந்திருந்தார். 1911 இல் அமைக்கப்பட்ட அவ்விமானத்தின் இறக்கைகள் அண்டார்க்டிக்காவில் தனது பயணம் தொடங்க முன்னரேயே பழுதாகிப் போனது.


கடுமையான குளிர் காரணமாக விமானத்தின் இயந்திரமும் பழுதாகிப் போகவே அதனை அங்கேயே கைவிடவேண்டியதாகிப் போனது.

மூலம்[தொகு]