உள்ளடக்கத்துக்குச் செல்

1915 ஆர்மேனிய இனப்படுகொலை குறித்த பிரெஞ்சு சட்டமூலத்திற்கு துருக்கி எதிர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 24, 2012

முதலாம் உலகப் போரின் போது ஒட்டோமான் துருக்கியரினால் நிகழ்த்தப்பட்ட ஆர்மேனிய இனப்படுகொலைகளை மறுப்பது ஒரு குற்றம் என பிரெஞ்சு மேலவை அண்மையில் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது குறித்து துருக்கி தனது ஆட்சேபத்தைத் தெரிவித்திருக்கிறது.


ஆர்மேனியர்கள் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர் (1915).

இச்சட்டம் ஒரு "பொறுப்பற்ற செயல்" எனத் தெரிவித்துள்ள துருக்கிய வெளியுறவுத்துற அமைச்சு இதற்குத் தகுந்த முறையில் பதிலடி கொடுப்போம் எனக் கூறியிருக்கிறது.


1915-1916 ஆம் ஆண்டுகளில் ஒட்டோமான் பேரரசு பிளவுண்டபோது 1.5 மில்லியன் பேர் வரையில் கொல்லப்பட்டனர் என ஆர்மேனியா தெரிவிக்கிறது. இப்படுகொலைகளை இனப்படுகொலை அல்ல எனவும், இறந்தோர் எண்ணிக்கை மிகவும் குறைவு எனவும் துருக்கி கூறுகிறது.


பிரெஞ்சு மேலைவையில் நிறைவேற்றப்பட்ட இச்சட்ட வரைபு அரசுத்தலைவர் நிக்கொலா சர்க்கோசியின் ஒப்புதல் பெற்றபின்னர் பெப்ரவரி முடிவுக்குள் சட்டமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்சின் கீழவை சென்ற மாதம் இச்சட்டமூலத்தை அங்கீகரித்திருந்தது.


பிரான்சில் அடுத்து வரும் அரசுத்தலைவர் தேர்தலை நோக்காகக் கொண்டே இச்சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளதாக துருக்கிய வெளியுறவுத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரான்சில் ஏறத்தாழ 500,000 ஆர்மேனியர்கள் வசிக்கின்றனர்.


1915 படுகொலைகளை இனப்படுகொலைகள் என பிரான்சு ஏற்கனவே அங்கீகரித்துள்ளது. ஆனாலும் புதிய சட்டமூலத்தின் படி, இவற்றை மறுக்கும் எவருக்கும் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும், 45,000 யூரோக்கள் வரை தண்டமும் விதிக்கப்படும்.


1915 ஏப்ரல் 24 இல் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரில் கைது செய்தனர். அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய சிரியா) நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பால் வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் இன்று வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே.


ஒட்டோமான் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய துருக்கிக் குடியரசு இந்நிகழ்வை இனப்படுகொலை எனக் கூறுவதை மறுத்து வருகிறது. அண்மைக் காலத்தில், இந்த இனப்படுகொலைகளை அங்கீகரிக்கப் பல நாடுகளும் அமைப்புகளும் துருக்கியைக் கோரி வருகின்றன.


மூலம்[தொகு]