1915 இனப்படுகொலையை ஆர்மீனியா நினைவு கூர்ந்தது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 24, 2012

1915-23 காலப்பகுதியில் உதுமானியர்களால் படுகொலை செய்யப்பட்ட 1.5 மில்லியன் தமது இனத்தவர்களை ஆர்மீனியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தனர்.


ஆர்மீனியத் தலைநகர் யெரெவானில் உள்ள ஆர்மீனிய இனப்படுகொலை நினைவாலயத்திற்கு பல்லாயிரக்கணகானோர் சென்று படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள், மற்றும் நாடுகடத்தப்பட்ட தமது இனத்தவரை நினைவு கூர்ந்தனர். நாட்டில் விரைவில் இடம்பெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களை ஒட்டிய பிரசாரங்களை ஒதுக்கி அரசியல்வாதிகள் அனைவரும் அங்கு சென்று தமது அஞ்சலியைச் செலுத்தினர்.


20 ஆம் நூற்றாண்டின் முதலாவது பெரும் இனப்படுகொலை என வர்ணிக்கப்படும் ஆர்மேனிய இனப்படுகொலைகளை முதன் முதலில் 1965 ஆம் ஆண்டில் உருகுவாய் அங்கீகரித்தது. அதன் பின்னர் பல நாடுகள் அங்கீகரித்தன. உருசியா 1995 ஆம் ஆண்டில் அங்கீகரித்தது.


1915-1916 ஆம் ஆண்டுகளில் உதுமானியப் பேரரசு (தற்போதைய துருக்கி) பிளவுண்டபோது 1.5 மில்லியன் பேர் வரையில் கொல்லப்பட்டனர் என ஆர்மேனியா தெரிவிக்கிறது. இப்படுகொலைகளை இனப்படுகொலை அல்ல எனவும், இறந்தோர் எண்ணிக்கை மிகவும் குறைவு எனவும் துருக்கி கூறுகிறது.


1915 ஏப்ரல் 24 இல் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரில் கைது செய்தனர். அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய சிரியா) நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பால் வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் இன்று வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]