உள்ளடக்கத்துக்குச் செல்

2002 பாலி குண்டுவெடிப்பு சந்தேக நபரை பாக்கித்தான் நாடு கடத்தியது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 11, 2011

இந்தோனேசியாவின் பாலித் தீவுகளில் 2002 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இடம்பெற்ற குண்டுவெடிப்புகளின் முக்கிய சந்தேக நபரான உமர் பட்டேக் என்பவர் பாக்கித்தானில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தோனேசியா திரும்பியுள்ளதாக ஜகார்த்தா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இவர் மீது வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.


பாலித் தீவுகளில் சுற்றுலா விடுதி ஒன்றில் 202 பேர் இறக்கக் காரணமாயிருந்த ஜெமா இசுலாமியா இயக்கத்தினரின் தாக்குதல்களை இவரே ஒருங்கிணைத்தார் என பயங்கரவாதத்துக்கெதிரான நிபுணர்கள் கருதுகின்றனர். இத்தாக்குதலுக்குக் காரணமானவர்களில் இவர் ஒருவரே எஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏனையோர் கைது செய்யப்பட்டோ அல்லது இறந்தோ போயுள்ளனர்.


தாக்குதலை நடத்திய டல்மடின் என்பவருடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்தார் எனக் காவல்துறையினர் நம்புகின்றனர். டல்மடின் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் காவல்துறையினரின் தாக்குதலின் போது கொல்லப்பட்டார்.


உமர் பட்டேக் மேலும் மூன்று தீவிரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாயிருந்திருப்பதாகவும், இவர் தெற்கு பிலிப்பீன்சு, மற்றும் ஆசியாவில் உள்ள அல்-கைதா இயக்கத்தினருடனும் தொடர்புள்ளவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர் இவ்வாண்டு அரம்பத்தில் பாக்கித்தானின் அபாட்டபாத் நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இந்ந்நகரிலேயே ஒசாமா பின் லாடனும் அமஎரிக்கப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.


2002 ஆம் ஆண்டு பாலிக் குண்டுவெடிப்புகளில் 21 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட 202 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 88 பேர் ஆத்திரேலியர்கள் ஆவர்.


தொடர்புள்ள செய்தி[தொகு]

மூலம்[தொகு]