2002 வன்முறை தொடர்பான ஆவணங்களை எரித்து விட்டதாக குஜராத் அரசு அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 30, 2011

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வன்முறை தொடர்பான அதிகாரபூர்வமான ஆவணங்களை அரசு ஒழுங்குமுறைக்கேற்ப எரித்துவிட்டதாக இவ்வன்முறை தொடர்பான விசாரணைகளின் போது குஜராத் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வன்முறை தொடர்பான தொலைபேசி அழைப்புகள், அதிகாரிகளின் நடவடிக்கைகள் போன்ற பதிவேடுகள் 2007 ஆம் ஆண்டில் அழிக்கப்பட்டு விட்டன. மத்திய அரசின் விதிகளுக்கமையவே சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பதிவேடுகள் அழிக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் எஸ்.பி. வாகில் தெரிவித்தார்.


இவ்வன்முறைகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் ஆவர். கோத்ரா தொடருந்து வழிமறிக்கப்பட்டு எரிக்கப்பட்டதில் 58 இந்துப் பயணிகள் உயிருடன் கொல்லப்பட்டதை அடுத்து மாநிலம் எங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பித்தன. இத்தொடருந்து எரிப்பின் காரணம் இதுவரையில் தெளிவாக அறியப்படவில்லை. ஆனாலும் இவ்வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 11 பேருக்கு கடந்த மார்ச் மாதத்தில் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் 20 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர்.


2008 ஆம் ஆண்டில் இவ்வன்முறை குறித்து விசாரிப்பதற்காக இந்திய உச்சநீதிமன்றம் உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்திருந்தது.


அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தை அனுமதித்திருந்தார் எனக் கடந்த ஏப்ரலில் உச்சநீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனாலும் தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை மோடி நிராகரித்திருந்தார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]