உள்ளடக்கத்துக்குச் செல்

2002 கோத்ரா தொடருந்து எரிப்பு: 11 பேருக்கு மரணதண்டனை அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 1, 2011

2002 ஆம் ஆண்டில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்றை எரித்த வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 11 பேருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர். 59 இந்துக்கள் இந்த எரிப்பில் கொல்லப்பட்டனர்.


2002 பெப்ரவரி 27 ஆம் நாள் அயோத்தியாவிலிருந்து சபர்மதி விரைவு வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த 59 பயணிகள் இறந்த இந்நிகழ்வு 790 இசுலாமியரும் 254 இந்துக்களும் பரந்தளவில் கொல்லப்பட்ட குசராத் வன்முறைக்குத் தூண்டுதலாக அமைந்தது. இவ்வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்கு குசராத் மாநில அதிகாரிகள் தவறிவிட்டனர் எனப் பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது.


இது குறித்த விசாரணைகளின் முடிவில் நீதிமன்றம் நிகழ்வு ஓர் திட்டமிடப்பட்ட நாசவேலை எனக் கடந்த வாரம் தீர்மானித்து 31 பேரை இத்தீயிடலுக்குக் குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கியது. 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் ஆவர்.


அயோத்தியாவில் இருந்து இருந்து திரும்பிக்கொண்டிருந்த தொடருந்து வண்டியை கோத்ராவில் தடுத்து நிறுத்திய நபர்கள், பின்னர் அவ்வண்டியின் ஒரு பெட்டிக்குத் தீ வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.


தொடருந்து அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்று 2005ஆம் ஆண்டு இந்த எரிப்பு ஓர் தீ விபத்தே எனக் கண்டறிந்தது. ஆயினும் இவ்வாணைக்குழு அமைக்கப்பட்டதை குசராத் உயர்நீதிமன்றம் "சட்ட சம்மதமில்லாதது" மற்றும் "அரசியலமைப்பிற்கு புறம்பானது" எனவும் கூறித் தள்ளுபடி செய்தது. குசராத் அரசால் நியமிக்கப்பட்ட மற்றொரு ஆணைக்குழு 2008 ஆம் ஆண்டு சதியொன்று தீட்டப்பட்டதாக நிறுவியது.


மூலம்

[தொகு]