2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: வங்காளதேச அணி இங்கிலாந்தை வென்றது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 12, 2011

2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் பி பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை சிட்டகொங்கில் பகல்-இரவு ஆட்டமாக வங்காளதேச அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் இடம்பெற்ற ஆட்டத்தில் வங்காளதேச அணி 4 இலக்குகளால் இங்கிலாந்து அணியை வென்று பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தொடரில் இங்கிலாந்து அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.


வங்காளதேச அணித் தலைவர் சகிப் அல் அசன் நாணயச்சுழற்சியில் வென்று இங்கிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இங்கிலாந்து அணியின் எண்ணிக்கை 32 ஆக இருக்கையில் பிரேயர் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அணித் தலைவர் ஸ்ரோஸ் 18 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுக்கள் சரியத் தொடங்கின. ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் 225 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஜொனதன் ட்ரொட் 67 ஓட்டங்களையும் இயொய்ன் மோர்கன் 63 ஓட்டங்களையும் பெற்றனர்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வங்காளதேச அணி 40 ஆவது ஓவரில் 8 ஆவது இலக்கை 169 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இருந்தது. 30வது, 40வது ஓவர்களுக்கிடையில் இங்கிலாந்து அணி 14 ஓட்டங்களுக்கு 5 இலக்குகளைக் கைப்பற்றியிருந்தது. ஆனாலும், மகுமுதுல்லாவும் 10 ஆவது வரிசை வீரர் சய்புல் இசுலாமும் ஒன்பதாவது இலக்குக்காக இணைந்து சிறப்பாகத் துடுப்பாடி வங்காளதேச அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். 49 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை வங்காளதேச அணி அடைந்தது. சய்புல் இசுலாம் 24 பந்துகளில் ஒரு ஆறு, 4 எல்லைகள் உட்பட ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்றார்.


வங்காளதேசத்தின் இம்ருல் கயாசு ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 4 புள்ளிகளுடன் உள்ள வங்காளதேச அணி அடுத்த சுற்றுக்குத் தெரிவாவதற்கு நெதர்லாந்து அணியையும் தென்னாப்பிரிக்க அணியையும் வென்றாக வேண்டும். அதே நேரத்தில் 5 புள்ளிகளுடன் உள்ள இங்கிலாந்து அணிக்கு இந்தச் சுற்றில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒரே ஒரு ஆட்டமே எஞ்சியுள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் அணியை அது வென்றாலும், அடுத்த சுற்றுக்குத் தெரிவாவதற்கு அது ஏனைய அணிகளின் ஆட்ட முடிவுகளில் தங்கியுள்ளது.


மூலம்[தொகு]