2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகள் ஆரம்பம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 19, 2011

2011 துடுப்பாட்ட உலகக்கோப்பைப் போட்டிகள் இன்று 2011 பெப்ரவரி 19ல் ஆரம்பமாகின்றன. இன்று இடம்பெறும் முதல் போட்டியில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்த்து ஆடுகிறது. இப்போட்டி வங்காளதேசத்தில் மிர்பூர் நகரில் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகள் இம்முறை இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் நாடுகளால் இணைந்து நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா நேற்று முன்தினம் 2011 பெப்ரவரி 17ல் டாக்காவில் கோலாகலமாக நடைபெற்றது.


இப் போட்டிகள் 2011 பெப்ரவரி 19ல் இருந்து ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 14 நாடுகளைச் சார்ந்த அணிகள் ஒவ்வொரு குழுவிலும் ஏழு அணிகள் வீதமாக இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற உள்ளன. இதன் படி பிரிவு ஏ யில் ஆத்திரேலியா, கனடா, கென்யா, நியூசிலாந்து, பாக்கித்தான், இலங்கை, சிம்பாப்வே ஆகிய அணிகளும் பிரிவு பீ யில் வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் விளையாடவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். அதன் பின்னர் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறும். மொத்தமாக 49 போட்டிகள் நடைபெற உள்ளன.


இந்த உலககிண்ணப் போட்டிகளை பாக்கித்தானும் உடனாக ஏற்று நடத்துவதாக இருந்தது. 2009ஆம் ஆண்டு லாகூரில் இலங்கைத் துடுப்பாட்ட அணியினர் தாக்கப்பட்ட நிகழ்வை அடுத்து பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை பாக்கித்தானின் நடத்தும் உரிமைகளை இரத்து செய்தது. லாகூரில் திட்டமிடப்பட்ட அமைப்புக்குழுவின் தலைமையகமும் மும்பைக்கு மாற்றப்பட்டது. பாக்கித்தான் 14 ஆட்டங்களை ஓர் அரையிறுதி உட்பட நடத்துவதாக இருந்தது. அவற்றில் எட்டு இந்தியாவிற்கும் நான்கு இலங்கைக்கும் இரண்டு வங்காளதேசத்திற்கும் பிரித்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதுவரை 9 உலகக் கோப்பைப் போட்டிகள் நடந்துள்ளன. 1975 நடைபெற்ற முதலாவது உலகக்கோப்பைப் போட்டியிலும், 1979ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகக்கோப்பைப் போட்டியிலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அடுத்தடுத்து வெற்றிபெற்றது. 1987, 1999, 2003, 2007 ஆகிய நான்கு முறையும் ஆஸ்திரேலியாவே கோப்பையை சுவீகரித்துக் கொண்டது. 1983ல் நடந்த மூன்றாவது போட்டியில் இந்தியாவும் 1992ல் நடந்த போட்டியில் பாகிஸ்தானும் 1996ல் இலங்கையும் உலகக் கோப்பையை வென்றெடுத்தது. இருப்பினும் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து இதுவரை ஒருமுறை கூட உலகக் கோப்பையை வெல்லவில்லை. அதேபோல தென் ஆப்பிரிக்காவுக்கும் நியூசிலாந்துக்கும் உலகக் கோப்பை வெறும் கனவாகவே இதுவரை இருந்துவந்துள்ளது.


மூலம்[தொகு]