உள்ளடக்கத்துக்குச் செல்

2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 13, 2014

2014 உலகக்கிண்ணக் கால்பந்துப் போட்டிகள் நேற்று வியாழக்கிழமை பிரேசிலில் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வுகள் சாவோ பவுலோ நகரில் அமைந்துள்ள கொரிந்தியன்சு அரங்கத்தில் கோலாகலமாக இடம்பெற்றன.


பிரேசில் 2014 ஆரம்ப விழா

உலகின் 2-வது மிகப் பெரிய விளையாட்டு திருவிழா என அழைக்கப்படும் உலகக்கிண்ணப் போட்டிகள் சூலை 13 வரை பிரேசிலின் 12 நகரங்களில் நடைபெறவுள்ளன. 32 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில் ஒவ்வொன்றிலும் 4 நான்கு அணிகளாக எட்டுப் பிரிவுகளில் போட்டிகள் இடம்பெறும்.


ஏ பிரிவில் பிரேசில், மெக்சிக்கோ, குரோவாசியா, கமரூன் ஆகிய அணிகளும், பி பிரிவில் எசுப்பானியா, நெதர்லாந்து, சிலி, ஆத்திரேலியா ஆகிய அணிகளும், சி பிரிவில் கிரேக்கம், கொலம்பியா, ஐவரி கோஸ்ட், சப்பான் ஆகிய அணிகளும், டி பிரிவில் இத்தாலி, உருகுவாய், இங்கிலாந்து, கொஸ்டா ரிக்கா ஆகிய அணிகளும் இ பிரிவில் பிரான்சு, சுவிட்சர்லாந்து, எக்குவடோர், ஒந்துராசு அணிகளும், ஆறாவது எஃப் பிரிவில் ஆர்ஜன்டினா, பொசுனியா எர்சகோவினா, ஈரான், நைஜீரியா ஆகிய அணிகளும், ஏழாவது 'ஜி' பிரிவில் செருமனி, போர்த்துக்கல், கானா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளும், எட்டாவது 'எச்' பிரிவில் பெல்ஜியம், அல்ஜீரியா, உருசியா, தென் கொரியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.


முதற்கட்ட ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்குத் (நொக் அவுட்) தகுதி பெறும்.


30 நிமிடங்கள் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் 660 பேர் நடனமாடி சிறப்பித்தார்கள். ஒவ்வொருவரும் பல்வேறு வகையான மரங்கள், மற்றும் பூக்கல் போன்ற ஆடைகளை அணிந்து நடனமாடினார்கள். பிரேசில் நாட்டின் பாரம்பரியத்தை நினைவு படுத்தும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மூன்று வெவ்வேறு நிகழ்வுகளாக நடந்த ஆரம்ப விழாவின் இறுதியில் பிரேசில் பாடகி குளோடொயா லெயிட்டி, அமெரிக்கப் பாடகி ஜெனிபர் லோப்பசு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். ஜெனிபரே உலகக் கிண்ண போட்டிக்கான அதிகாரபூர்வப் பாடலைப் பாடியவர் ஆவார்.


ஆரம்ப வைபவத்தை அடுத்து உலகக்கிண்ணத்தின் முதலாவது போட்டி பிரேசில் அணிக்கும் குரொவாசியா அணிக்கும் இடையில் நடைபெற்றது. 3:1 என்ற கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது. குரோவாசியாவுக்கான கோலை பிரேசில் அணியைச் சேர்ந்த மார்செலோ சுய கோலாகப் போட்டார். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. ஆட்டம் முடிவடைய 20 நிமிடங்கள் இருக்கையில் பிரேசில் அணிக்கு பெனால்ட்டி கோல் வாய்ப்புக் கிடைத்தது. 71-வது நிமிடங்களில் இந்த கோல் அடிக்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இதன் போது பிரேசிலின் வீரர் நெய்மர் தனது இரண்டாவது கோலை அடித்தார். மூன்றாவது கோலை ஒஸ்கார் அடித்து பிரேசில் அணியை வெற்றி பெறச் செய்தார்.


4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் 1930 ஆண்டு அறிமுகமானது. இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் போட்டி இடம்பெறவில்லை. 2010-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில் எசுப்பானியா அணி கோப்பையை வென்றது.


மூலம்[தொகு]