உள்ளடக்கத்துக்குச் செல்

2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 9, 2014

உலகக்கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பிரேசில் அணியை செருமனி அணி 7- 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து சாதனை படைத்தது.


படம் நன்றி: Agência Brasil
படம் நன்றி: Agência Brasil

ஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்தில் செருமனியின் தொமஸ் முல்லர் முதலாவது கோலைப் போட்டார். ஆட்டம் தொடங்கி 29 நிமிடங்களில் செருமனி அணி 5-0 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தனர். 23-வது நிமிடம் முதல் அடுத்த 6 நிமிடங்களில் 4 கோல் அடித்து சாதனை படைத்தது செருய்மனிய அணி. இரண்டாவது பகுதியில் மேலும் இரண்டு கோல்களைப் போட்டனர். 90வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ஒஸ்கார் ஒரு கோலைப் போட்டார்.


நேற்றைய வெற்றி மூலம் செருமனிய அணி உலகக்கிண்ண வரலாற்றில் 8வது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்தது. இதற்கு முன்பு 1954, 1966, 1974, 1982, 1986, 1990, 2002 ஆகிய உலககோப்பைப் போட்டிகளில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. இவற்றில் 1954, 1974, 1990 ஆகிய ஆண்டுகளில் வாகையாளர் பட்டத்தைப் பெற்றது.


பிரேசில் அணி, தனது கால்பந்து வரலாற்றிலேயே பெரும் தோல்வியை நேற்று சந்தித்தது. கடைசியாக 1920-ம் ஆண்டு உருகுவாய் அணிக்கு எதிராக 0-6 என்ற கணக்கில் தோற்று இருந்தது.


பிரேசில் அணியின் முக்கிய ஆட்டக்காரர் நெய்மார் முதுகெலும்பு முறிந்த நிலையில் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. அத்துடன் பிரேசில் அணித்தலைவர் தியேகோ சில்வாவும் ஏற்கனவே இரண்டு மஞ்சள் அட்டைகள் வாங்கியதால் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை.


செருமனியின் மிரசிலாவ் குளோஸ் உலகக்கிண்ண போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். நேற்றைய போட்டியில் தனது 16வது உலககோப்பை கோலைப் போட்டு பிரேசிலின் ரொனால்டோவின் சாதனயை முறியடித்தார். குளோஸ் இதுவரை 4 உலகக்கிண்ணத் தொடர்களில் பங்குபற்றினார்.


இதற்கிடையில், நேற்றைய போட்டியில் பிரேசில் அணி அடைந்த மிகப்பெரும் தோல்வியினால் அந்நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். "பிரேசிலியர்கள் அனைவரும் போலவே, இத்தோல்வியால் நானும் மிக மிக வேதனை அடைந்துள்ளேன்," என பிரேசில் அரசுத்தலைவர் தில்மா ரூசெஃப் தனது டுவீட்டர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


இன்று புதன்கிழமை ஆர்ஜென்டீனாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே நடைபெறவிருக்கும் மற்றைய அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதி ஆட்டத்தில் செருமனியை எதிர்கொள்ளும். செருமனியின் அரசுத்தலைவர் அங்கிலா மெர்க்கல் இறுதிப் போட்டியைக் கண்டு களிக்க பிரேசில் செல்லவிருக்கிறார்.


மூலம்[தொகு]