உள்ளடக்கத்துக்குச் செல்

2030களில் பூமியை மோதவிருக்கும் சிறுகோளைத் தடுக்கும் முயற்சியில் ரஷ்யா

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 1, 2010


2029 ஆம் ஆண்டில் இருந்து பூமியைப் பல முறை கடக்கவிருக்கும் பாரிய சிறுகோள் (Asteroid) ஒன்று பூமியுடன் மோதவிடாமல் தவிர்க்கும் முயற்சி ஒன்றைத் தாம் ஆரம்பிக்கவிருப்பதாக ரஷ்யாவின் ரொஸ்கொஸ்மொஸ் (Roscosmos) என்ற நடுவண் வானியல் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.


அப்போஃபிஸ் சிறுகோள்

இப்பிரச்சினை குறித்து அந்நிறுவனத்தின் அறிவியலாளர் குழு ஓர் அவசரக் கூட்டத்தை நடத்த விருப்பதாக அனத்தோலி பெர்மினோவ் வொய்ஸ் ஒஃப் ரஷ்யா வானொலிச் சேவைக்குத் தெரிவித்தார். எந்தவொரு திட்டமும் பன்னாடுகளின் ஒத்துழைப்புடனேயே இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார்.


அப்போஃபிஸ் (Apophis) என்ற அந்த சிறுகோள் 2036 ஆம் ஆண்டில் பூமியை மோதுவதற்கு 250,000 இல் ஒன்று என்ற விகிதத்திலேயே வாய்ப்புள்ளதாக சென்ற அக்டோபரில் அமெரிக்காவின் நாசா தெரிவித்திருந்தது.


முன்னராக இந்த வாய்ப்பு 45,000 இல் ஒன்று எனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதன் வாய்ப்பு நாசாவின் இந்த அறிவிப்பால் மிகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. 350 மீட்டர் குறுக்களவு உள்ள இச்சிறுகோள் 2029 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 30,000 கிமீ தூரத்தில் பூமியை நெருங்கி வரும். அடுத்த 7 ஆண்டில் மேலும் பூமியை நோக்கி நகர்ந்து 2036-ம் ஆண்டு பூமி சுற்றுப் பாதைக்குள் நுழையும்.


எப்படி இச்சிறுகோளை அழிக்கவிருக்கிறார்கள் என்பதை திரு பெர்மீனொவ் தெரிவிக்கவில்லை. ஆனாலும் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டா என அவர் தெரிவித்தார்.


"இந்தக் கோள் பூமியின் மீது வந்து விழுந்தால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகும். இது வந்து விழும் வரை காத்திருக்காமல், அதைத் தடுக்கும் வகையிலான பாதுகாப்பு நடைமுறைகளை சில கோடிகளை செலவழித்து மேற்கொள்வது நல்லது என நாங்கள் கருதுகிறோம். இது பூமியில் வந்து விழாமல் தடுக்கும் வகையில் ஒரு பிரமாண்ட ராக்கெட்டை அனுப்பி அதை சிதறடிப்பது அல்லது திசை திருப்புவது, அல்லது அந்தக் கோளுக்குள் வெடி பொருட்களை புதைத்து வெடிக்கச் செய்வது என பல யோசனைகள் கூறப்படுகின்றன," என்றார் பெர்மீனோவ்.

மூலம்

[தொகு]