உள்ளடக்கத்துக்குச் செல்

இசுரேலியத் தூதரக அதிகாரியை ஆஸ்திரேலியா வெளியேற்றியது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 25, 2010

சென்ற ஆண்டு துபாயில் ஹமாஸ் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலி ஆஸ்திரேலியக் கடவுச் சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக இசுரேலியத் தூதரக அதிகாரி ஒருவரை ஒரு வாரத்துக்குள் வெளியேறுமாறு ஆஸ்திரேலியா பணித்துள்ளது.


அந்தச் சம்பவத்தை “இது ஒரு நட்பு நாடொன்றின் வேலை அல்ல” என ஆத்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் வர்ணித்துள்ளார். ஆத்திரேலியாவின் இந்நடவடிக்கை கவலைக்குரியது என இசுரேலிய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


சென்ற மார்ச் மாதம் இவ்விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவும் இதே போன்ற நடவடிக்கையை எடுத்திருந்தது.


ஹமாசின் இராணுவ மூளை என்று வர்ணிக்கப்பட்ட மகுமூத் அல்-மபுவா துபாயில் வைத்து கடந்த ஜனவரியில் கொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்ய இஸ்ரேல் உளவுத்துறை 12 பேருக்கு ஆத்திரேலியா, பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து ஆகிய நாடுகளின் கடவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டன. குறைந்தது 4 போலி ஆஸ்திரேலியக் கடவுச் சீட்டுக்கள் பாவிக்கப்பட்டன. இவை இசுரேலில் வசிக்கும் ஆத்திரேலியர்களுடையதாகும்.


ஆஸ்திரேலியாவிலுள்ள இசுரேல் தூதரகம் அப்போது இந்த கடவுச்சீட்டுக்களை வழங்கி வந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீவன் சிமித் தெரிவித்தார்.


”இராசதந்திர விடயங்களில் மோசடி இடம்பெறுதை நாங்கள் ஏற்கமாட்டோம். எனவே ஒரு வார காலத்திற்குள் அந்தக் குறிப்பிட்ட இசுரேலியத் தூதரக அதிகாரி எமது நாட்டை விட்டு வெளியேற வேண்டும்,” என ஸ்டீவன் சிமித் தெரிவித்தார். அந்த அதிகாரியின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.


இசுரேலின் மொசாத் என்கிற உளவு அமைப்பே இதில் சம்பந்தப்பட்டிருந்தது என்பதின் தமக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை என துபாய் அதிகாரிகள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர். இக்குற்றச்சாட்டை இசுரேலிய அரசு மறுத்து வருகிறது.

மூலம்

[தொகு]