உள்ளடக்கத்துக்குச் செல்

மொரோக்கோவில் மசூதி ஒன்றின் கோபுரம் இடிந்து வீழ்ந்ததில் 38 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 20, 2010


மொரோக்கோவின் மைய நகரான மெக்னெசில் மசூதி ஒன்றின் நான்கு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மினார் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


பேர்டீயின் மசூதியின் மினார்

பேர்டீயின் மசூதியில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது இடம்பெற்ற இந்நிகழ்வில் மேலும் 60 பேர் காயமடைந்தனர்.


பல நாட்களாக அப்பகுதியில் பெய்து வந்த மழையை அடுத்தே இந்தக் கோபுரம் இடிந்து வீழ்ந்துள்ளதாக உள்ளூர்த் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.


பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


வெள்ளிக்கிழமைத் தொழுகைக்காக ஏறத்தாழ 300 பேர் குழுமியிருந்ததாக உள்ளூர் வாசி ஒருவர் ராஅய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.


"மசூதியின் இமாம் தொழுகையை ஆரம்பிக்க இருக்கையிலேயே மினார் இடிந்து வீழ்ந்தது," என அவர் தெரிவித்தார்.


மொரோக்கோவின் பழைய கட்டடங்கள் அங்கு இடிந்து வீழ்வது வழமை என்றும், ஆனால் மினார் ஒன்று வீழ்ந்தது இதுவே முதற் தடவை என்று அவதானிகள் தெரிவித்தனர்.


இடிந்த மினாரை உடனடியாக மீள அமைக்க மொரோக்கோ மன்னர் ஆறாம் முகமது உத்தரவிட்டுள்ளார்.


யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் மெக்னெஸ் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்

[தொகு]