இரசியா வெற்றி நாளைக் கொண்டாடியது, நேட்டோ படைகள் பங்கேற்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 10, 2010

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து 65 ஆண்டுகள் நிறைவு நாள் இரசியாவில் நேற்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் மொஸ்கோவில் நேற்று இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பின் போது முதற்தடவையாக வெளிநாட்டுப் படையினரும் கலந்து கொண்டனர்.

2010 வெற்றி விழாச் சின்னம்

இரண்டாம் உலகப் போரின் போது முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் நேச நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், மற்றும் போலந்து படைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.


அத்துடன் ஜெர்மனியின் அரசுத்தலைவர் அஞ்சலா மெர்க்கல், போலந்து தலைவர் புரொனிஸ்லாவ் கமரோவ்ஸ்கி, இசுரேல் தலைவர் சிமோன் பெரெஸ், சீனாவின் ஹோ சிந்தாவு உட்படப் பல நாட்டுத் தலைவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.


இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற வெற்றி விழாக்களில் நேற்றைய நிகழ்வே மிகவும் சிரப்பாக இருந்ததாக அவதானிகள் தெரிவித்தனர். செஞ்சதுக்கத்தின் ஊடாக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள், தாங்கிகள் உட்படப் பல இராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. கிட்டத்தட்ட 150 விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் செஞ்சதுக்கத்தின் மேல் பரந்து வட்டமிட்டன. 10,000 இரசிய இராணுவத்தினர் பங்குபற்றினர்.


இரண்டாம் உலகப் போரின் படிப்பினைகள் எம்மிடையே ஒற்றுமையை தேவை என்பதை வலியுறுத்துகிறது, என இரசிய அரசுத்தலைவர் திமீத்ரி மெத்வேதெவ் உரையாற்றுகையில் தெரிவித்தார்.


மேற்குலக நாடுகள் வெற்றி விழாவை ஒவ்வோர் ஆண்டும் மே 8 ஆம் நாள் கொண்டாடுகின்றன. ஆனால் இரசியா மே 9 ஆம் நாளன்று கொண்டாடுகின்றது. இந்நாளிலேயே நாசிப் படையினர் அதிகாரபூர்வமாக சரணடைந்தனர்.

மூலம்[தொகு]