இலங்கைப் பணிப்பெண்கள் மூவருக்கு சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 24, 2014

இலங்கைப் பணிப்பெண்கள் மூவர் தமது இரண்டாண்டுக் காலப் பணி ஒப்பந்தக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக நாடு திரும்ப முயன்றதற்காக சவூதி அரேபிய நீதிமன்றம் ஒன்று அவர்களுக்கு தண்டனை விதித்துள்ளது.


இவர்கள் ஒப்பந்த காலம் நிறைவடைவதற்கு முன்னதாக நாடு திரும்ப ஆளுக்கு 43,000 சவூதி ரியால்கள் பணம் செலுத்த வேண்டுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது. இப்பணத்தை செலுத்த முடியாத காரணத்தினால் மூன்று பெண்களும் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.


பணி ஒப்பந்தக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக நாடு திரும்ப முடியாத வகையில் சவூதி அரேபிய அரசு சட்டமியற்றியுள்ளது. வெளிநாட்டுப் பணிப்பெண்கள் தொடர்பான புதிய சட்டமூலம் கடந்த ஆண்டு சூலை 15 இல் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு கடந்த அக்டோபர் மாதத்தில் நடைமுறைக்கு வந்தது. இதன் படி, வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தகுந்த காரணமின்றி தனக்கான வேலையை நிராகரிக்கவோ, அல்லது வேலையை விட்டு நீங்கவோ முடியாது.


தாம் பணியாற்றும் வீட்டில் உள்ளவர்கள், மற்றும் அவர்களின் உடமைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, அவர்களை, குறிப்பாக சிறுவர்களை எவ்வகையிலும் துன்புறுத்தக்கூடாது போன்ற பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. தமது தனிப்பட்ட விருப்பின் அடிப்படையில் எவ்வித கேளிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது.


அத்துடன் பணிப்பெண்ணுக்கு ஊதியம் எவ்வித தடங்கலுமின்றி வழங்கப்பட வேண்டும், வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை, ஒரு நாளுக்கு குறைந்தது 9 மணி நேரம் ஓய்வு போன்ற பல விடயங்கள் இச்சட்டமூலத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளின் பின்னர் ஊதியத்துடன் கூடிய ஒரு மாத விடுமுறை வழங்கப்படும்.


மூலம்[தொகு]