உலகின் மிக உயர்ந்த கட்டடம் துபாயில் திறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 5, 2010


உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்று கூறப்படுகின்ற புர்ஜ் துபாய் அல்லது "புர்ஜ் காலிஃபா" என்ற புதிய கட்டிடம் நேற்று திறக்கப்பட்டது.


இதன் உயரம் 828 மீட்டர் (2,716அடி) என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தைவானில் உள்ள தாய்ப்பே 101 என்ற கட்டிடம் மிக உயரமானதாக இருந்தது.


புர்ஜ் துபாய் என்ற பெயரில் கட்டப்பட்டு வந்த இக்கட்டிடம், தற்போது இதனை நிர்மாணித்தவரின் பெயரில் அழைக்கப்படுகிறது. 160 மாடிகளைக் கொண்டதாக இக்கட்டிடம் அமைந்துள்ளது.


துபாய் அதிவேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்துவந்த சமயத்தில் இக்கட்டிடம் கட்ட ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அமீரகங்களின் வெற்றிச் சின்னமாக இக்கட்டிடம் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது கட்ட ஆரம்பிக்கப்பட்டிருந்தது.


ஆனால் ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கி, செல்வச் செழிப்பு மிக்க தனது அண்டை ஊரான அபுதாபியால் மீட்கப்படவேண்டிய நிலைக்கு துபாய் தள்ளப்பட்டுள்ள ஒரு தருணத்ததில் இக்கட்டிடம் திறக்கப்படுகிறது. இருந்த போதிலும் கட்டடத் திறப்பு விழா சிறப்பாக நடந்ததாக கட்டடத்தின் வடிவமைப்பு பொறியாளர் பில் பேக்கர் கூறினார்.


இக்கட்டடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், வர்த்தக அலுவலகங்கள், பொழுதுபோக்கு நிலையங்கள் என பல வசதிகள் உள்ளன. இக்கட்டடத்தில் மின் தூக்கி வசதிகளுடன் தானியக்க படிக்கட்டுகளும் உள்ளன.


உலகின் மிகப்பெரிய மசூதியும், நீச்சல் குளமும் 158வது, 76வது மாடிகளில் அமைந்துள்ளன.

மூலம்[தொகு]