ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு ருவாண்டா தெரிவு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 19, 2012

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் அடுத்த இரண்டாண்டுகளுக்கு உறுப்பினராக இருப்பதற்கு ருவாண்டா தேர்ந்தெடுக்கப்பட்டது.


தனது அயல் நாடான கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் இடம்பெற்று வரும் ஆயுதக் கிளர்ச்சிகளுக்கு ருவாண்டா உதவியளித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு ஓரிரு நாட்களுக்குள் இந்தத் தெரிவு இடம்பெற்றிருக்கிறது. ருவாண்டாவின் பாதுகாப்பு அமைச்சர் கொங்கோவின் எம்23 போராளிக் குழுக்களுக்கு நேரடியாக உத்தரவு வழங்கி வருவதாக ஐநாவின் அறிக்கை ஒன்று தெரிவித்திருந்தது.


15-உறுப்பினர்கள் அடங்கிய பாதுகாப்பு அவைக்கான ஐந்து நிரந்தரமற்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ருவாண்டாவைத் தவிர அர்ஜெண்டீனா, ஆத்திரேலியா, தென் கொரியா, லக்சம்பர்க் ஆகிய நாடுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன.


ருவாண்டாவின் தெரிவுக்கு கொங்கோ எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், ருவாண்டாவுக்கு ஆதரவாக 148 வாக்குகள் கிடைத்தன. தற்போது தென்னாப்பிரிக்காவிடம் உள்ள பாதுகாப்பு அவை உறுப்புரிமை சனவரி 1 இல் ருவாண்டாவுக்குக் கிடைக்கும்.


மூலம்[தொகு]