கொங்கோவில் எரிமலை சீற்றம்: அரிதான சிம்பன்சிகளுக்கு ஆபத்து

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 3, 2010


கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் எரிமலை ஒன்று வெடித்துச் சீறியதில், அப்பகுதியில் வாழும் மிக அரிதான சிம்பன்சிகளுக்கு ஆபத்தாக உள்ளதாக வனப்பகுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.


நியிரகொங்கோ மற்றும் நியாமுராகிரா எரிமலைகள்

கொங்கோவின் கிழக்கு நகரான கோமாவில் இருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள நியாமுராகிரா மலை நேற்று சனிக்கிழமை வெடித்ததில், அதிலிருது கிளம்பிய எரிமலைக் குழம்புகள் அம்மலையைச் சுற்றியிருந்த விருங்கா தேசியப் பூங்கா வரையில் வந்து வீழ்ந்தன.


இப்பகுதியில் சுமார் 40 அரிதான சிம்பன்சிகளும் வேறு மிருகங்களும் வாழ்ந்து வருகின்றன.


ஆனாலும், கொங்கோவின் புகழ்பெற்ற சில மிக அரிதான மலை கொரில்லாக்கள் மேலும் கிழக்கே வாழ்வதால் அவற்றிற்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


தேசியப் பூங்காவின் ஊழியர்கள் உள்ளூர் மக்கள் மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து தேவையான பாதுகாப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள் என விருங்காவின் உயரதிகாரி எம்மானுவேல் டி மெரூடே தெரிவித்தார்.


ஐக்கிய நாடுகளின் உலங்கு வானூர்தி ஓன்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


உடனடியாக ஆபத்துக்குள்ளான பகுதிகளில் குறைந்தளவு மக்களே வசிக்கின்றபடியால், அவர்கள் வாழும் குடியேற்றப் பகுதிகளை பாதுகாக்கும் பணி முக்கியமாக மேற்கொள்ளப்படுகிறது.


எரிமலைக் குழம்புகள் மக்கள் செறிந்து வாழும் தெற்குப் பகுதி நோக்கிச் செல்வதாக, விருங்காவின் தலைமைக் காவலர் இனசெண்ட் உம்புரனும்வே தெரிவித்தார்.


"அதிகாலை 0345 மணிக்கு பலத்த இடியோசை கேட்டது. போர் மீண்டும் வெடித்து விட்டதோ என்று பயந்தேன். பின்னர் மலை எரிந்து, குழம்புகள் சீறிப் பாய்ந்தாதைக் கண்டேன்", என்றார் இனசெண்ட்.


நியாமுலாகிரா மலை 3,058 மீட்டர் உயரமானது. இது ஆப்பிரிக்காவில் உள்ள மலைகளில் இன்னமும் உயிருடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்று.


1882 ஆம் ஆண்டில் இருந்து 35 எரிமலைக் குமுறல்கள் பதிவாகியுள்ளன. 1979 ஆம் ஆண்டில் இருந்து விருங்கா தேசியப் பூங்கா உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோ அங்கீகரித்துளது.


கோமா நகரில் 200,000 பேர் வசிக்கிறார்கள். அத்துடன் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

மூலம்[தொகு]