சிலி சுரங்கத் தொழிலாளர்கள் ஐவர் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 13, 2010

சிலியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சுரங்கம் ஒன்றில் சிக்கிய தொழிலாளர்களின் ஐந்து பேர் வெற்றிகரமாக வெளியே கொண்டுவரப்பட்டனர்.


2010 அக்டோபர் 10 ஆம் நாளில் சுரங்கத்தில் மீட்பு நடவடிக்கை

மீட்பு பணிகள் நடக்கும் இடத்தில் சிலி நாட்டு அரசுத்தலைவர் செபஸ்தியான் பெனேரேவும் இருந்தார். முதலில் மீட்கப்பட்ட 31 வயது பிளாரன்சியோ அவலோசு என்பவரை அதிபர் கைகொடுத்து வரவேற்றார். பிளாரன்சாவின் மனைவியும், குழந்தையும் அவரை கண்ணீர் மல்க வரவேற்றனர்.


நாசாவின் உதவியுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாளை வியாழக்கிழமைகுள் மீதமுள்ள சுரங்கத் தொழிலாளிகளும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ள ஒவ்வொரு தொழிலாளியையும் மீட்க சுமார் 90 நிமிடங்கள் தேவைப்படும் என மீட்பு குழு தெரிவித்துள்ளது.


ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு, உள்நாட்டுப் பத்திரிகையாளர்கள் கடந்த சில நாட்களாக சுரங்கம் இருக்கும் இடத்தை முற்றுகையிட்டிருந்தனர்.


சிலி நாட்டிலுள்ள அட்டகாமா பாலைவனத்தில் உள்ள 700 மீட்டர் நீள சுரங்கத்தின் முக்கிய வழி கடந்த ஆகத்து 5ம் நாளன்று இடம்பெற்ற மண்சரிவால் மூடப்பட்டதை அடுத்து உட்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். உள்ளே சிக்கிக் கொண்டவர்களிடம் இருந்து பல நாட்களாக எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை. இந்நிலையில் உள்ளிருந்தவர்கள், வெளியில் இருந்தவர்களுக்கு குறுந்தகவல் மூலம் தாங்கள் உயிருடன் இருப்பதை தெரியப்படுத்தினர். இதையடுத்து, மண்சரிவால் மூடப்பட்ட பகுதியில் துளை ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக ஒரு சிறிய விடியோ கருவி மூலம் சுரங்கத்தின் உட்பகுதி கண்காணிக்கப்பட்டது. இதனையடுத்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டது.


மீட்கப்படும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இரண்டு முதல் நான்கு நாட்கள் வரையில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று சிலி அரசு அறிவித்துள்ளது.

தொடர்புள்ள செய்திகள்


மூலம்