மலேசியாவில் கிறித்தவக் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டன

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 30, 2014

மலேசியாவில் குவாந்தான் நகருக்கு அருகே தாஞ்சோங் ஆபி என்ற இடத்தில் உள்ள கிறித்தவ இடுகாடு ஒன்றில் இருந்த எட்டுக் கல்லறைகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.


இக்கல்லறைகளில் அமைக்கப்பட்டிருந்த சிலுவைகள் உட்பட நினைவுச்சின்னங்கள் கடின ஆயுதங்களைக் கொண்டு உடைக்கப்பட்டிருந்தன. பலவற்றில் அருகில் இருந்த பூந்தொட்டிகளும் சேதமாக்கப்பட்டன.


இது குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ள குவாந்தான் தஞ்சோங் ஆபி கிறித்தவக் கல்லறைக் குழுவின் தலைமை உறுப்பினர் ஜேக் ஹவ், காவல்துறையினரிடம் இது குறித்து முறையிட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார்.


இதே வேளையில் நேற்று முன்தினம் பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ் டவுன், லெபோ ஃபார்க்குவார் சாலையில் உள்ள கிறித்தவக் கோவில் ஒன்றினுள் அதிகாலையில் இனந்தெரியாதோரால் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இரண்டும் தேவாலயத்திற்கு வெளியே புற்தரையில் வீழ்ந்ததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இவற்றில் ஒன்றே வெடித்தது. பினாங்கில் உள்ள கிறித்தவக் கோயில்களுக்கு வெளியே "அல்லாவின் புதல்வரே இயேசு" போன்ற சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளும் ஆங்காங்கே காணப்பட்டன.


மலேசியாவில் முசுலிம் அல்லாதோர் கடவுளை 'அல்லா" என அழைப்பதற்கு அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் தடை விதித்திருந்தது. அல்லா என்ற சொல் இசுலாமுக்கு மட்டுமே உரித்தானது எனக் கூறியிருக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம், இது மீறப்படுமானால் நாட்டில் அமைதியின்மை ஏற்படும் என எச்சரித்துள்ளது.


இவ்வார வன்முறைகளை அடுத்து 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்றது போன்ற இனக்கலவரம் வெடிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]