மலேசியாவுக்குள் ஊடுருவ முனைந்த 35 சூலு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 28, 2013

மலேசியாவின் சபா மாநிலத்துள் ஊடுருவ முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதம் ஏந்திய சூலு போராளிகள் 35 பேரை பிலிப்பீன்சின் கடற்படையினரும் கடலோரக் காவல்படையினரும் புதன்கிழமை அன்று சுட்டுக் கொன்றுள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது.


சூலு தீவுக்கூட்டம்

போராளிகள் மலேசியக் கடற்பகுதிக்குள் நுழைவதற்கு முன்னதாகவே கொல்லப்பட்டு விட்டனர் என மலேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் அகமது அமீதி தெரிவித்துள்ளார். மலேசியாவில் மே 5 ஆம் நாள் பொதுத்தேர்தல்கள் இடம்பெறவிருக்கும் நிலையில் இந்த ஊடுருவல் இடம்பெற்றுள்ளது.


தமது கடற்படையினர் சூலு போராளிகளைக் கொன்றதாகத் தெரிவிக்கப்படும் செய்திகளை பிலிப்பீன்சின் படைத்துறையினர் மறுத்துள்ளனர். மலேசிய எல்லைப் பகுதி "அமைதியாக" உள்ளதாக பிலிப்பீனிசின் பிராந்தியக் கடற்படைத் தளபதி கப்டன் ரெனாட்டோ யோங் தெரிவித்தார்.


ஆனாலும், சபாவுக்குள் செல்ல முயன்ற தமது 35 போராளிகளை மலேசியக் கடற்படையினரே சுட்டுக் கொன்று விட்டு அவர்களின் உடல்களை பிலிப்பீன்சின் கடற்பகுதிக்குள் வீசியதாக சூலு சுல்தானகப் பேச்சாளர் ஆபிரகாம் இத்சிராணி வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார்.


உளவுத் துறையின் அறிக்கை ஒன்றின் படி, சபாவுக்குள் ஊடுருவ முற்பட்ட சூலு போராளிகள் மலேசியத் தேர்தலின் போது பிரச்சினையை உருவாக்கத் திட்டமிட்டிருந்ததாக மலேசியப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.


சூலு சுல்தானகம் மலேசியாவின் சபா மாநிலத்திற்கு உரிமை கோரிப் போராடி வருகிறது. கடந்த பெப்ரவரி இறுதியில் சூலு சுல்தானின் சகோதரர் ஒருவரின் தலைமையில் ஆயுதப் போராளிகள் சபா மாநிலத்தின் செம்பூர்னா என்ற கிராமத்தினுள் ஊடுருவியதில் இடம்பெற்ற மோதலில் 10 மலேசியப் படையினர் கொல்லப்பட்டனர்.


சூலு சுல்தானகம் 1457-1917 காலப்பகுதியில் பிலிப்பீன்சின் பெரும்பாலான தெற்குத் தீவுகள், மற்றும் போர்னியோ ஆகிய இடங்களில் பரவியிருந்தது. இவர்கள் சபாவைத் தமது பகுதியாக அறிவித்திருந்தன. சபா பின்னர் 1800களில் பிரித்தானியாவின் காப்பு நாடாக அறிவிக்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டில் சபா மலேசியாவுடன் இணைக்கப்பட்டது. சூலு சுல்தானகத்திற்கு மலேசியா இப்போதும் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை குத்தகையாகக் கொடுத்து வருகிறது. சபாவின் உண்மையான உரிமையாளராகத் தம்மை அறிவிக்குமாறு சூலு சுல்தானின் அரசு கோரி வருகிறது. அத்துடன் பழைய குத்தகை உரிமையை மீள் பரிசீலனைக்கு விடுமாறும் அது கேட்டு வருகின்றது. இக்கோரிக்கையை ஏற்க மலேசியா மறுத்து வருகிறது.


மூலம்[தொகு]