ராஜ் ராஜரத்தினத்துடன் இணைந்து பங்கு மோசடியில் ஈடுபட்ட ரஜத் குப்தா கைது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 28, 2011

அமெரிக்காவின் முன்னாள் செல்வந்தர் ராஜ் ராஜரத்தினத்துடன் இணைந்து மாபெரும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்தியரான ரஜத் குப்தா நேற்று முன்தினம் அமெரிக்காவில் நடுவண் புலனாய்வுத்துறை (எஃப்பிஐ) அதிகாரிகளிடம் சரணடைந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


ரஜத் குப்தா

அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் நிதி விவரங்களை ‘உட்தகவல் வணிகம்’ மூலம் அறிந்து 75 பில்லியன் டாலர்கள் மோசடி செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்ட ராஜரத்தினத்திற்கு இரு வாரங்களுக்கு முன்னர் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ராஜரத்தினத்துக்கு இந்த மோசடியில் உதவி செய்த இந்தியரான ரஜத் குப்தா மீதும் அமெரிக்கக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.


கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான ரஜத் குப்தா, தான் பணியாற்றிய புராக்டர் அண்ட் கேம்பிள், பெர்க்சைர் இன்வெஸ்ட்மென்ட், கோல்ட்மேன் சேக்ஸ் மற்றும் மெக்கிங்ஸ்லி நிதி நிறுவனம் ஆகியவற்றின் நிதி விவரங்களை ராஜரத்தினத்துக்குத் அளித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஜத் குப்தா தவிர மேலும் ஏராளமான நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் ராஜரத்தினத்திற்கு உதவியுள்ளனர். இதற்காக இவர்களுக்கும் ராஜரத்தினம் ஏராளமான பணம் கொடுத்துள்ளார்.


62 வயதான ரஜத் குப்தா அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்பட்ட ஓர் இந்தியர் ஆவார். இப்போது இவர் மீது 6 நிதி மோசடி வழக்குகளைத் தொடர்ந்துள்ளது எப்பிஐ. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 105 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். இந் நிலையில் ரஜத் குப்தா 10 மில்லியன் டாலர் பிணையில் அமெரிக்காவை விட்டு வெளியே செல்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் மீதான விசாரணை வரும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]