விண்வெளியில் உயிர்வாயு முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 3, 2011

விண்வெளியில் ஒக்சிசன் மூலக்கூறுகளை வானியலாளர்கள் முதற்தடவையாகக் கண்டுபிடித்துள்ளனர். ஓரியன் என்ற விண்மீன் குழுமத்தில் விண்மீன் உருவாகும் பகுதியில் ஐரோப்பாவின் எர்ச்செல் விண்தொலைநோக்கி ஒக்சிசன் மூலக்கூறுகளைக் கண்டறிந்துளது.


ஒக்சிசன் மூலக்கூறு

இது குறித்த ஆய்வு முடிவுகள் வானியற்பியல் இதழில் வெளியிடப்படவுள்ளது.


அண்டவெளியில் ஐதரசன், மற்றும் ஈலியத்துக்கு அடுத்தபடியாக பெருமளவில் காணப்படும் மூலகம் ஒக்சிசன் ஆகும். ஆனாலும் பூமியில் உயிர்வாழ்வதற்கு அவசியமாக உள்ள ஒக்சிசன் மூலக்கூறு வடிவில், இரண்டு அணுக்கள் பிணைந்த நிலையில், விண்வெளியில் இதுவரையில் அறியப்படவில்லை.


2007 ஆம் ஆண்டில் அண்மையில் உள்ள விண்மீன் உருவாகும் பகுதி ஒன்றில் ஒக்சிசன் மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுவீடனின் ஓடின் நுண்தொலைநோக்கி கண்டுபிடித்ததாக அப்போது அறிவித்திருந்தது. ஆனாலும், இம்முடிவுகள் தனிப்பட்ட முறையில் நிரூபிக்கப்படவில்லை.


அகச்சிவப்பு ஒளியை உணரக்கூடிய உபகரணங்கள் பொருத்தப்பட்ட எர்ச்செல் நுண்ணோக்கி யில் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்கள் ஒக்சிசன் மூலக்கூறுகளின் சிறிய அளவைக் கண்டுபிடித்துள்ளது.


"ஒக்சிசன் மூலக்கூறுகள் ஒளிந்திருக்கும் இடங்கள் இதன் மூலம் தெளிவாகலாம்," எனக் கூறினார் எர்ச்செல் ஆய்வாலர் பவுல் கோல்ட்ஸ்மித்.


"பெருமளவு உயிர்வாயுவை நாம் கண்டுபிடிக்கவில்லை. பேரண்டம் இன்னும் பல இரகசியங்களைப் பதுக்கி வைத்திருக்கிறது," என்றார் அவர்.


மூலம்[தொகு]