கர்நாடக முதல்வர் எதியூரப்பா பதவி விலக பாஜக உத்தரவு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 28, 2011

கர்நாடகச் சுரங்க ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வர் எதியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பாஜக உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து புதிய முதலமைச்சர் தேர்வு செய்ய பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.


இந்நிலையில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய ஜேட்லி மற்றும் ராஜ்நாத் நாளை பெங்களூர் வருகின்றனர். அடுத்த முதல்வராக தேர்வு செய்ய ஐந்து பேரின் பெயரை பாஜக மேலிடம் பரிந்துரை செய்துள்ளது.


முதல்வர் எதியூரப்பா மீதான இரும்பு மற்றும் சுரங்க ஒதுக்கீட்டில் இவரும், இவரது குடும்பத்தினரும் பெரும் ஆதாயம் பெற்றதாக லோக்அயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது. இந்த அறிக்கையில் சுரங்க ஒதுக்கீடு காரணமாக அரசுக்கு 16 ஆயிரத்து 805 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சுரங்க நிறுவனத்திடம் இருந்து எடியூரப்பா மகன்கள் நடத்தும் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர் என்றும், மேலும் சில அமைச்சர்களும் மதச் சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆகியோரும் ஆதாயம் அடைந்துள்ளனர், என்றும் லோக்அயுக்தா தலைவர் சந்தோஷ் எக்டே கூறியுள்ளார். அதே நேரம் பதவி விலக எதியூரப்பா மறுத்து வருகிறார். தன்னை நீக்கினால் ஆட்சி கவிழும் என எச்சரித்துள்ளார் எதியூரப்பா.


மூலம்[தொகு]