ரொஜர் பெடரர் 7வது தடவையாக விம்பிள்டன் கோப்பையைக் கைப்பற்றினார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 9, 2012

லண்டனில் நேற்று நடைபெற்ற டென்னிசு பெருவெற்றிப் போட்டித் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் கோப்பைக்கான போட்டியின் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் 7வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.


ரொஜர் பெடரர் (2009)

இறுதி ஆட்டத்தில் ரொஜர் பெடரருடன் இங்கிலாந்தின் ஆன்டி முரே ஆடினர். நேற்றைய ஆட்டத்தின் பெடரர் முதல் செட்டில் 4 - 6 என்ற கணக்கில் தோல்வியடைந்த போதும், அடுத்த 3 செட்களில் 4 -6, 7-5, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் முரேயை வீழ்த்தினார்.


இது பெடரர் பெறும் 7வது விம்பிள்டன் பட்டமும், 17வது பெருவெற்றிப் (கிராண்ட் சிலாம்) பட்டமுமாகும். இதன்மூலம், விம்பிள்டன் பட்டத்தை 7 முறை வென்றுள்ள பீட் சாம்ப்ராசின் சாதனையை பெடரர் சமப்படுத்தியுள்ளார். நேற்றைய வெற்றியை அடுத்து பெடரர் உலகின் டென்னிசு ஆட்டக்காரர் வரிசையில் மீண்டும் 1வது இடத்துக்கு வந்துள்ளார்.


கடைசியாக பிரித்தானிய வீரர் ஒருவர் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் விளையாடி வென்றது 1938 ஆண்டிலாகும். அப்போது "பணி" ஆஸ்டின் என்பவர் விம்பிள்டன் கோப்பையை வென்றார். நேற்றைய ஆட்டத்தில் பிரித்தானியாவின் முரே வெற்றி பெறுவார் என இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.


சனியன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தனது 5வது விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றினார்.


மூலம்[தொகு]