மலேசியச் சட்டங்களில் முக்கிய மாற்றங்களை பிரதமர் நஜிப் அறிவித்தார்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்தெம்பர் 20, 2011

மலேசியாவின் முக்கிய சட்டங்களில் பல்வேறு மாற்றங்களை பிரதமர் நஜிப் துன் ரசாக் சென்ற வாரம் அறிவித்தார். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், நாடு கடத்தல் சட்டம் (1959) ஆகியன நீக்கப்படல், 1933 இன் கட்டுப்படுத்தப்பட்ட குடியிருப்போர் சட்டம் மறுஆய்வு, மற்றும் தற்போது நடப்பில் இருக்கும் மூன்று அவசரகாலப் பிரகடனங்களை நீக்க வழி செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல், போன்ற முக்கிய அறிவிப்புகளை பிரதமர் நஜிப் வெளியிட்டார்.


பிரதமர் நஜிப் துன் ரசாக்

51 ஆண்டு கால உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (இசா) ஒரு நீண்ட கால சர்ச்சையாக இருந்து வந்தது. விசாரணையின்றி எவரையும் தடுத்து வைக்கவும், ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் இச்சட்டம் வழிவகுத்தது. இச்சட்டத்தை நீக்க பிரதமர் நஜிப் துன் ரசாக் எடுத்த முடிவு புரட்சிகரமானது என்று அந்நாட்டின் பல்வேறு தலைவர்கள் வர்ணித்துள்ளனர். 2013ம் ஆண்டில் நடைபெற விருக்கும் மலேசிய பொதுத் தேர்தலில் அம்னோவுக்கு இந்த சட்ட மாற்றங்கள் சாதக நிலையைத் ஏற்படுத்தித் தரும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.


மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரான ஜி. பழனிவேல் “ஒரே அறிவிப்பின் மூலம் பிரதமர் உலக நாடுகளுடன் ஒரே நேர்கோட்டில் மலேசிய நாட்டை இட்டுச் சென்றுவிட்டார்,” என்று கூறியுள்ளார்.


பத்திரிகை உரிமம், காவல்துறை சட்டவிதி 27 போன்றவற்றிலும் சீரமைப்புகளை கொண்டு வருவதாக பிரதமர் நஜிப் அறிவித்துள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு மாற்றாக தீவிரவாதிகளைத் தடுத்து வைப்பதற்கு ஏதுவான இரு புதிய சட்டங்கள் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.


மூலம்[தொகு]