பாற்புணர்ச்சி வழக்கில் மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் விடுதலை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 9, 2012

இரண்டாண்டுகள் விசாரணைக்குப் பின்னர் பாற்புணர்ச்சி வழக்கில் மலேசிய எதிர்க் கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் இன்று விடுதலை செய்யப்பட்டார்.


அன்வர் இப்ராகிம்

நீதிபதி சபிடின் முகமது டாயா வழக்கில் முன்வைக்கப் பட்ட சாட்சியங்களையும் ஆதாரங்களையும் பார்வையிட்ட பின்னர், அன்வார் ஓரினப் புணர்ச்சியில் ஈடுப்பட்டதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார். டி.என்.ஏ ஆதாரங்கள் எதுவும் நம்பக்கூடியதாக இல்லையென்று நீதிபதி கூறினார்.


தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்திருந்த அன்வர் இப்ராகிம், 64, "தனது அரசியல் வாழ்வை அழிக்க அரசாங்கம் செய்த சூழ்ச்சியே இவ்வழக்கு" எனக் கூறி வந்தார். தாம் ஓரினப் புணர்ச்சி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. எனவே , எதிர்வரும் நாட்டின் 13-வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவேன் என அன்வர் இப்ராகிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இவ்வழக்கு மலேசியாவில் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராகிம் மீது முதன் முதலில் 1998 இல் இவ்வழக்கு தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில் அவருக்கு ஓன்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2004ல் இவ்வழக்கிலிருந்து விடுதலையானார். 2008, சூன் 29 இல் இவருடைய உதவியாளர் முகம்மது செய்புல் புகாரி அசலன் என்பவர் தன்னை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாகக் கூறி வழக்கு தாக்கல் செய்தார். ஓரினப் பாற்புணர்ச்சி மலேசியாவில் சட்டவிரோதமானதாகும்.


இதற்கிடையில், ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் இருவர் காயமடைந்தனர். அன்வர் இப்ராகிம் இன்று விடுதலை செய்யப்பட்ட பின் காலை 10.45 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.


மூலம்[தொகு]