உள்ளடக்கத்துக்குச் செல்

மாலி: இசுலாமியப் போராளிகள் துவாரெக்குகளிடம் இருந்து காவோ நகரைக் கைப்பற்றினர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 28, 2012

மாலியின் வடக்குப் பகுதியில் இசுலாமியத் தீவிரவாதிகள் துவாரெக் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காவோ நகரைக் கைப்பற்றினர்.


இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். துவாரெக் போராளிகளின் அரசியல் தலைவர் ஒருவர் படுகாயமடைந்தார். அல்-கைதாவுடன் தொடர்புடைய இசுலாமியத் தீவிரவாதிகள் நகரில் இருந்த துவாரெக்குகளின் தலைமைக் கட்டடத்தைத் தாக்கிக் கைப்பற்றியுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.


படுகாயமடைந்த உள்ளூர்த் தலைவர் மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடொன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


இவ்வாண்டு மார்ச் மாதத்தில் மாலியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியைத் தமக்கு சாதகமாக்கிய இப்போராளிக் குழுக்கள் இரண்டும் இணைந்து மாலியின் வடக்குப் பகுதியை மாலி இராணுவத்திடம் இருந்து முழுமையாகக் கைப்பற்றித் தனிநாடாக அறிவித்தனர். இதனையடுத்து அங்கு சுமூக நிலை பாதிக்கப்பட்டது.


கடந்த திங்கள் அன்று காவோ நகர உள்ளூர் அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இரு குழுக்களுக்கும் இடையில் மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது. மோதல்களில் இறந்தவர்கள் பெரும்பாலானோர் ஆயுததாரிகள் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறின.


இரு குழுக்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படுவதில் தடங்கல் உள்ளது என்பதை இந்த மோதல் எடுத்துக்காட்டுவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அல்-கைதாவுடன் தொடர்புள்ள அன்சார் டைன் குழு ஏற்கனவே சரியா சட்டத்தை தாம் கைப்பற்றிய சில நகரங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.


மூலம்

[தொகு]