உள்ளடக்கத்துக்குச் செல்

துவாரெக் போராளிகள் மாலியின் வடக்கில் விடுதலைப் பிரகடனம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 6, 2012

கடந்த மாத இறுதியில் மாலியின் வடக்குப் பகுதியின் பல பிரதேசங்களைக் கைப்பற்றிய துவாரெக் போராளிக் குழுவினர் அசவாத் என்ற தாம் கைப்பற்றிய பகுதி விடுதலை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.


இந்த விடுதலைப் பிரகடனத்தை அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அத்துடன், மாலியின் ஏனைய மாநிலங்களின் எல்லைகளைத் தாம் மதிப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. உலக நாடுகள் தமது நாட்டை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அது கேட்டுக் கொண்டுள்ளது. இந்த இயக்கம் நேற்று வியாழன் முழுமையான போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது.


மாலியின் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரான பிரான்சு அசவாதின் விடுதலைப் பிரகடனத்தை ஏனைய ஆப்பிரிக்க நாடுகள் ஏற்காது விட்டால் தாமும் ஏற்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.


துவாரெக் போராளிக் குழுவினருடன் இணைந்து போரில் இறங்கிய அன்சார் தைன் என்ற இசுலாமியத் தீவிரவாதிகளின் நிலைப்பாடு என்ன என்பதில் குழப்ப நிலையே நீடிக்கிறது. அசவாதின் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் துவாரெக் போராளிகளை விட இசுலாமியத் தீவிரவாதிகளே அதிகம் நடமாடி வருவதாக அங்கிருந்து வெளியேறிய சிலர் தெரிவித்ததாக பிபிசிச் செய்தியாளர் தெரிவிக்கிறார்.


நேற்று வியாழன் அன்று மாலியின் வடகிழக்கே அல்ஜீரியத் தூதரக அதிகாரிகள் ஏழு பேரை இசுலாமியத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். இதற்கிடையில் ஐக்கிய இராச்சியம் மாலியின் தலைநகர் பமக்கோவில் இருந்த தமது தூதரகத்தை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]