ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 12, 2011

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்துள்ளதாக இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையின் பேச்சாளர் அர்ச்சனா தத்தா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.


ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவுக்கல்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மே 21-ம் நாள், தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில், விடுதலைப் புலிகள் நடத்திய, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி, முருகன், சின்ன சாந்தன் உள்ளிட்ட 26 பேருக்கு, 1998, ஜனவரி 28ம் தேதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்றவர்கள் உச்சநீதிமன்றத்த்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த, உச்சநீதிமன்றம் நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், மற்றவர்களை விடுதலை செய்தும், 1999ம் ஆண்டு மே 11ம் தேதி தீர்ப்பளித்தது. மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் தமிழக ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். இதில், நளினி மனுவை மட்டும் ஏற்றுக்கொண்டு, அவரது தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.


ராஜீவ் காந்தியின் தாயாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு அக்டோபரில் படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலையில் சம்பந்தப்பட்ட அவரது மெய்க்காப்பாளர் பின்னர் தூக்கிலிடப்பட்டார். கடைசியாக 2004 ஆம் ஆண்டில் 41 வயதுடைய முன்னாள் காவல் பணியாளர் ஒருவர் 14 வயது பள்ளி மானவி ஒருவரை பாலியல் வன்புணருக்குட்படுத்திப் படுகொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார்.


மூலம்[தொகு]