உள்ளடக்கத்துக்குச் செல்

மகாராட்டிரத்தில் ஜைதாபூர் அணு மின் நிலையத்தை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 29, 2010

பிரான்சு நாட்டின் தனியார் நிறுவனம் அவேராவுடன் (Avera) இணைந்து இந்திய அணுமின் கழகம் மகாராட்டிர மாநிலத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில் கொண்கன் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள மதுபன் கிராமத்தில் ஜைத்தாபூர் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.


நடுவண் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் சில நிபந்தனைகளை விதித்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இங்கு 9900 மெகா வாட் உற்பத்தித் திறனுடன் கூடிய மின்சாரம் தயாரிப்பதற்கு இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டுள்ளது.


முதற்கட்டமாக இங்கு மிகவும் நவீன தொழில் நுட்பம் கொண்ட 1650 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு மின் உலைகள் நிறுவப்படும். வரும் காலத்தில் இதுவே இந்தியாவின் மிகப் பெரிய அணு மின் நிலையமாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் பிரெஞ்சு நாட்டு அரசுத்தலைவர் நிக்கொலா சார்க்கோசி இந்தியாவிற்கு வரும் பொழுது இது போன்ற மேலும் நான்கு அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.


இந்திய அணுமின் கழகம் அணு மின் நிலையங்களை அமைத்து வணிக ரீதியில் மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான திட்டங்களை நடுவண் அரசின் அனுமதியுடன் தீட்டியுள்ளது. இதன் படி பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து ஜைத்தாபூரில் அமைக்கப்படும் திட்டம் வணிக ரீதியில் முதலாவது திட்டமாகும்.


1973ஆம் ஆண்டு இந்தியா முதன் முதலில் அணு ஆயுத சோதனை நடத்தியதைத் தொடர்ந்து அனைத்துலக அளவில் விதிக்கப்பட்ட அணுத்தொழில் நுட்பத் தடை, இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் நீக்கப்பட்டதையடுத்து செய்யப்பட்டுள்ள முதல் தொழில்நுட்ப-வணிக ஒப்பந்தம் இதுவாகும்.


இவ்வணுமின் நிலையத் திட்டத்துக்கு எதிராக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மாபெரும் எதிர்ப்பைக் காட்டினர். உள்ளூர் மீனவர்கள், மற்றும் மக்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். இத்திட்டம் கொண்கன் கடலில் உள்ள கடல் வாழ் உயிரினங்களை அழிக்க மட்டும் அல்லாம உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் என அவர்கள் வாதிட்டனர்.


மூலம்

[தொகு]