2011 கனடா பொதுத்தேர்தலில் பழமைவாதிகள் மீண்டும் வெற்றி
- 26 செப்டெம்பர் 2016: இந்திய விண்வெளி ஆய்வு மையம் இசேகட்சாட்-1 செயற்கை கோளை விண்ணுக்கு ஏவியது
- 17 சனவரி 2014: கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் தான் இலங்கையில் பின்தொடரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்
- 9 திசம்பர் 2013: இணையத்தில் விற்கப்படும் முடிநீக்கிகள் கண்பார்வையை பறிக்கும்: கனடா எச்சரிக்கை
- 30 ஏப்பிரல் 2013: அழைப்புகளை தன்வடிவ மாற்றத்தினால் உணர்த்தும் சுட்டிப்பேசி
- 28 ஏப்பிரல் 2013: பொதுநலவாயத் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறுவது குறித்து கனடா அதிர்ச்சி
செவ்வாய், மே 3, 2011
கனடாவில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஸ்டீவன் ஹார்ப்பர் தலைமையிலான பழமைவாதக் கட்சி ஆட்சியமைக்கும் பெரும்பான்மையைப் பெற்றது.
308 இடங்களுக்கு இடம்பெற்ற தேர்தலில் பழமைவாதிகள் 167 இடங்களைப் பெற்றனர். புதிய சனநாயகக் கட்சி 102 இடங்களையும், லிபரல் கட்சி 34 இடங்களையும், கியூபெக்குவா 4 இடங்களையும் பெற்றது. பசுமைக் கட்சி 1 இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளில் இது கனடாவில் நடந்த நான்காவது பொதுத்தேர்தல் ஆகும். 2006 ஆம் ஆண்டில் இருந்து சிறுபான்மை உறுப்பினர்களுடன் ஸ்டீவன் ஹார்ப்பர் ஆட்சி செய்து வந்துள்ளார். கடந்த தேர்தலில் பழமைவாதிகள் 143 இடங்களைப் பெற்றனர்.
பழமைவாதிகள் ஆட்சியில் இருந்த போது லிபரல் கட்சியே எப்போதும் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கி வந்துள்ளது. ஆனால், தற்போது அது மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டு புதிய சனநாயகக் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கவிருக்கிறது.
கனடாவின் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் மாநிலத்தில் தனிநாடு கோரிப் போராடும் கியூபெக்வா புளொக் கட்சி இம்முறை பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. சென்ற முறை 49 இடங்களை வென்றிருந்த அக்கட்சி இம்முறை வெறும் 4 இடங்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், இத் தேர்தலில் புதிய சனநாயகக் கட்சி சார்பில் ஸ்கார்பரோ-ரூச் ரிவர் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சிற்சபேசன் 18,097 வாக்குகள் பெற்று நாடாளுமன்றம் செல்லும் முதல் தமிழர் என்ற பெருமையைப் பெறுகிறார். பழமைவாதிகளின் சார்பில் தென்மேற்கு ஸ்கார்பரோ தொகுதியில் போட்டியிட்ட கவன் பரஞ்சோதி 12,822 வாக்குகளைப் பெற்று புதிய சனநாயகக் கட்சி வேட்பாளரிடம் 1,291 வாக்குகளினால் தோல்வியடைந்தார்.