உள்ளடக்கத்துக்குச் செல்

ருவாண்டா போராளித் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை குற்றவியல் நீதிமன்றம் நிராகரிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 17, 2011

கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் படுகொலைகள், மற்றும் பாலியல் குற்றங்கள் இழைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்ட ருவாண்டாவின் முன்னைநாள் போராளித் தலைவரின் குற்றங்கள் அனைத்தும் நீதிபதிகளினால் நிராகரிக்கப்பட்டன.


குற்றமிழைத்ததற்கான சாட்சியங்கள் போதுமானதவையாக இல்லை எனக் காரணம் காட்டி ருவாண்டா விடுதலைக்கான மக்களாட்சிப் படைகள்" (FDLR) என்ற போராளிக்குழுவின் தலைவர் உம்பருசிமானாவை உடனடியாக விடுவிக்குமாறு த ஹேக் நகரில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டனர்.


இத்தீர்ப்புக்கு எதிராகத் தாம் மேன்முறையீடு செய்யவிருப்பதாக வழக்குத் தொடுநர்கள் அறிவித்துள்ளனர்.


கொங்கோவில் 2009 ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கானோரைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கவும், படுகொலைகள் செய்யவும் போராளிகளுக்கு உத்தரவிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்ட்டு கடந்த ஆண்டு அக்டோபரில் இவர் பிரான்சில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.


1994 ருவாண்டா தூத்சி இனப்படுகொலைகளிலும் "ருவாண்டா விடுதலைக்கான மக்களாட்சிப் படையினரின் சில தலைவர்கள் சம்பந்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருவாண்டாவில் தூத்சி இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட குழு ஆட்சியைக் கைப்பற்றியதும் இவர்கள் அயலில் உள்ள கொங்கோ மக்களாட்சிக் குடியரசிற்குள் தப்பி ஓடியதை அடுத்து கொங்கோவில் நீண்டகாலம் சுமுகநிலை பாதிக்கப்பட்டிருந்தது.


ஊட்டு இனப் போராளிகள் கொங்கோவைத் தமது தளமாகப் பாவிப்பதை நிறுத்துவதற்காக ருவாண்டா தனது படையினரை அங்கு இரு தடவைகள் அனுப்பியிருந்தது. இதனையடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் 5 மில்லியன் பேர் வரை கொல்லப்பட்டனர்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]