உள்ளடக்கத்துக்குச் செல்

பூமிக்கு அச்சுறுத்தலான சிறுகோள்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தனியார் நிறுவனம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 29, 2012

பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சிறுகோள்களைக் (asteroid) கண்டுபிடிக்கும் முயற்சியில் கலிபோர்னியாவைச் சேர்ந்த இலாப-நோக்கமற்ற தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தை இந்த தசாப்த இறுதிக்குள் நிறைவேற்றுவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


2005 யூ55 என்ற சிறுகோள்

பூமிக்குக் கிட்டவாக இருக்கும் பூமிக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய பெரும் பாறைகளைக் கண்டுபிடிக்க இடங்காட்டும் அகச்சிவப்பு தொலைக்காட்டி ஒன்றை விண்வெளியில் வைத்திருக்க இத்திட்டம் வழிவகுக்கும். இந்த பி612 (B612 Foundation) என்ற இந்தத் திட்டத்திற்கு பலநூறு மில்லியன் டாலர்கள் செலவழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகையை எட்ட உலகெங்கிலும் இருந்து நன்கொடை திரட்டப்படவிருக்கிறது. இத்திட்டத்தில் பல முன்னாள் விண்வெளிவீரர்கள், மற்றும் நாசா அறிவியலாளர்கள் பலர் இணைந்துள்ளனர்.


விண்வெளியில் உலவும் இத்தகைய சிறுகோள்களால் பூமிக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வை உலக நாடுகளுக்கு இந்த அமைப்பினர் கடந்த 10 ஆண்டுகளாக எடுத்துக்கூறி வருகின்றனர். இந்தப் பாறைகள் எங்குள்ளன என்பதை அறிய வேண்டிய தருணம் வந்துள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.


"மனிதனுக்கான சுற்றுச்சூழல் என்பது நிலம், நீர், மற்றும் காற்று மட்டுமல்லாமல் விண்வெளியும் இணைந்தது என்பதை கடந்த சில ஆண்டுகளாக நாம் உணர்ந்து வருகிறோம்," இத்திட்டத்தின் தலைவரும், அப்பல்லோ 9 இன் விண்வெளிவீரருமான ரஸ்டி சுவெய்க்கார்ட் தெரிவித்தார்.


4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நமது சூரியக் குடும்பம் உருவான போது கழித்து விடப்பட்ட பாறைகளே இந்த சிறுகோள்கள் ஆகும். இவற்றில் பல செவ்வாய், மற்றும் வியாழனுக்கு இடையில் அமைந்திருக்கும் சிறுகோள் பட்டையில் காணப்படுகின்றன. ஆனாலும் சில பாறைகள் பூமிக்குக் கிட்டவாக வந்துவிடுகின்றன.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]