உள்ளடக்கத்துக்குச் செல்

பிரேசிலின் முதலாவது பெண் அதிபராக டில்மா ரூசெப்ஃ பதவியேற்றார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 3, 2011

இலத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலின் முதலாவது பெண் அரசுத்தலைவராக டில்மா ரூசெஃப் கடந்த சனிக்கிழமை அன்று பதவியேற்றார். தனது பதவியேற்பு வைபவத்தில் நாட்டில் இருந்து வறுமையை ஒழிப்பதாகச் சபதமெடுத்தார்.


டில்மா ரூசெஃப்

பதவியேற்பு நிகழ்வில் கிட்டத்தட்ட 70,000 ஆதரவாலர்கள் கலந்து கொண்டனர். பதவியேற்பின் பின்னர் ஞாயிறன்று அவர் இசுப்பானிய இளவரசர் பிலிப்பே, மற்றும் உருகுவே அரசுத்தலைவர் ஒசே முஜிக்கா உட்படப் பல தல உலகத்தலைவர்களைச் சந்தித்து உரையாடினார்.


முன்னாள் மார்க்சியப் போராளியும், சிறைவாசம் அனுபவித்தவருமான ருசெஃப் பதவியில் இருந்து விலகிய அரசுத்தலைவர் லூயிசு லூலா ட சில்வாவின் அரசில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியவர். லூலாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அரசுத்தலைவர் பதவிக்கு ரூசெஃபை அவர் தேர்ந்தெடுத்தார். அரசுத்தலைவருக்கான தேர்தல் காலத்தில் ரூசெபுக்காக தேர்தல் கூட்டங்களில் கலந்து கொண்டார்.


கடந்த அக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலில் ரூசெஃப் 56 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 63 வயதான ரூசெஃப், பிரேசிலின் உயர்ந்தளவு பணவீக்கம், மற்றும் வட்டி வீதம் போன்றவற்றுடன் போராட வேண்டி இருக்கும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.


கடந்த வெள்ளிக்கிழமை அன்று லூலா ட சில்வா தனது பதவிக்காலத்தின் கடைசி நாளில், செசாரே பட்டிஸ்டி என்ற இத்தாலிய இடதுசாரி அரசியல் போராளியை நாடுகடத்துவதற்கு எதிராகக் கையொப்பமிட்டமை இத்தாலியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. லூலாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இத்தாலி தனது பிரேசிலுக்கான தூதரைத் திருப்பி அழைத்திருந்தது. 1970களில் நான்கு அரசியல் படுகொலைகளுக்காகத் தேடப்பட்டு வந்தவர் பட்டிஸ்டி. அவருக்கு பிரேசில் அரசியல் தஞ்சம் கொடுத்திருந்த்தது.


தொடர்புள்ள செய்தி

[தொகு]

மூலம்

[தொகு]