உயிரினம் வாழ ஏதுவாகக் கருதப்படும் வேற்றுலகங்கள் தரப்படுத்தப்பட்டன

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், நவம்பர் 24, 2011

வேற்றுலக வாசிகள் வசிக்கக்கூடியதெனக் கருதப்படும் கோள்களையும் சந்திரன்களையும் அறிவியலாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இதன் படி சனியின் நிலவான டைட்டன், மற்றும் துலா விண்மீன் கூட்டத்தில் காணப்படும் கிளீசு 581ஜி என்ற புறக்கோள் ஆகியன வேற்றுலகத்தவர்கள் வாழ்வதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த ஆய்வு முடிவுகள் வானுயிரியல் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.


"பூமியைப் போன்ற சூழ்நிலைகள் வேற்றுலகங்களில் உள்ளனவா என்பது முதலாவது கேள்வியாகும். இச்சூழ்நிலைகள் உள்ள உலகங்கள் மனிதர் வாழத் தகுதியானவை என நாம் அனுமானிக்கலாம்," என வாசிங்டன் மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாலர் டர்க் சூல்சு-மாக்குச் என்பவர் கூறினார்.


"எமக்குத் தெரித்த அல்லது தெரியாத வேறு இனங்கள் வாழக்கூடிய சூழல் புறக்கோள்களில் உள்ளனவா என்பது எம்முன் உள்ள இரண்டாவது கேள்வியாகும்."


இரு வகைகளில் இவை தரப்படுத்தப்படுகின்றன. பருமன், அடர்த்தி, தாய் விண்மீனிலிருந்தான தூரம் போன்ற இயல்புகளைக் கொண்டு பூமியை ஒத்துள்ளதா எனக் கணிக்கும் முறை முதலாவதாகும். இது பூமியை ஒத்த குறியீட்டெண் (Earth similarity index) என அழைக்கப்படுகிறது. மற்றையது வேற்றுலகம் ஒன்று பாறைகளினால் ஆனதா அல்லது உறைந்த மேற்பரப்பாலானதா, வளிமண்டலம் உள்ளதா அல்லது காந்தப் புலம் உள்ளதா போன்ற இயல்புகளை ஆராய்கிறது. இது கோள்களில் வாழத்தகுந்த குறியீட்டெண் (Planetary Habitability Index, PHI) என அழைக்கப்படுகிறது.


பூமியின் “பூமியை ஒத்த குறியீட்டெண் 1 எனக் கொண்டால், கிளீசு 581ஜி என்ற புறக்கோளின் குறியீட்டெண் 0.89 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. கிளீசு 581டி என்ற புரக்கோளின் குறியீட்டெண் 0.74 ஆகும்.


எமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் செவ்வாயின் குறியீட்டெண் 0.70 உம் , புதனின் குறியீடு 0.60 உம் ஆகும்.


PHI எனப்படும் கோள்களில் வாழத்தகுந்த குறியீட்டெண் அதிகமுள்ளது சனிக் கோளின் நிலவான டைட்டன் ஆகும். இதன் குறியீடு 0.64, இதற்கடுத்தபடியாக செவ்வாய் (0.59), வியாழனின் நிலவான யுரோப்பா (0.47) ஆகியன காணப்படுகின்றன.


நாசாவின் கெப்லர் விண்கலம் 2009 ஆம் ஆண்டில் விண்ணுக்கு ஏவப்பட்டதில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்வாழக்கூடிய கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]