அர்ச்சென்டினாவின் முன்னாள் தலைவருக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 23, 2010

மனிதநேயத்திற்கு எதிராகக் குற்றம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அர்ச்செண்டினாவின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் ஜோர்ஜ் விடெலாவுக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.


1976-1983 காலப்பகுதியில் இராணுவ ஆட்சியின் போது பதவியில் இருந்தவர் இராணுவத் தலைவர் ஜெனரல் விடெலா, 85. தனது அரசியல் எதிரிகள் பலரைக் கொலை செய்ய உடந்தையாக இருந்தமைக்காக அவருக்கு கோர்டோபா நிதிமன்றம் குற்றவாளியாகக் கண்டது. 30,000 இற்கும் அதிகமானோர் அக்காலப்பகுதியில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.


பொதுமக்களின் சிறைச்சாலையில் அவர் தனது இறுதிக்காலத்தைச் செலவழிக்க வேண்டும் என நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறினர். ஏற்கனவே இவர் தனது ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த குற்றங்களுக்காக ஆயுள்சிறையை அனுபவித்து வந்தார். ஆனாலும் அவர் சிறப்புச் சலுகைகளைப் பெற்று வந்தார்.


கோர்டோபாவில் 31 சிறைக்கைதிகளின் படுகொலைகளுக்கு விடெலா பொறுப்பாக இருந்தார் என நீதிபதி தெரிவித்தார். இடதுசாரி அரசியல்வாதிகள் பலர் சிறைக்கூடங்களில் இருந்து பலவந்தமாக வெளியே கொண்டு செல்லப்பட்டுச் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் சிறையில் இருந்து தப்ப முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக அப்போது இராணுவம் தெரிவித்தது.


மூலம்[தொகு]