உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாவது இளையர் ஒலிம்பிக் போட்டிகள் சிங்கப்பூரில் ஆரம்பம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 16, 2010

முதலாவது இளையர் ஒலிம்பிக் போட்டிகள் சனிக்கிழமை ஆகத்து 14 அன்று சிங்கப்பூரில் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மெரீனா பே என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் தளத்தில் கிட்டத்தட்ட 7,000 பேர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் சுடர் சுடர் ஏற்றப்பட்டு இளையர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின. சுமார் 27,000 பேர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.


முதலாவது இளையர் ஒலிம்பிக் போட்டிகள் சிங்கப்பூரில் ஆரம்பமாயின
முதல் நாள் நிகழ்வு

இப்போட்டிகள் 14ம் தேதி தொடங்கி இம்மாதம் 26ம் தேதி வரை நடைபெறும். போட்டிகளில் 14 முதல் 18 வரை வயதுள்ள 3,600 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்வர். 205 தேசிய ஒலிம்பிக் குழுக்களைச் சேர்ந்த இந்த வீரர்கள், 26 வகை விளையாட்டுகளில் 184 போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்வர்.


"ஒலிம்பிக் இயக்கத்தின் வரலாற்றில் இன்று நாம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி உள்ளோம்," என்று பன்னாட்டு ஒலிம்பிக் இயக்கத்தின் தலைவர் சாக் ரொக் இளைய ஒலிம்பிக் போட்டிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.


முதல் நாள் வைபவத்தில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், அதிபர் எஸ். ஆர். நாதன் உட்படப் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முதல் தங்கம்

உலகின் முதலாவது இளையர் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை நேற்று சப்பான் தட்டிச் சென்றது. சப்பானின் யூகா சாடோ (18) 1 மணி 49.69 நிமிடங்களில் மூவகைப் போட்டியை முடித்து வெற்றி பெற்றார். ஆத்திரேலியாவின் எல்லி சல்தோஸ் இரண்டாவது இடத்தில் வந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஐக்கிய அமெரிக்காவின் கெல்லி விட்லிக்கு வெண்கலம் கிடைத்தது.

மூலம்

[தொகு]